குறைந்த பட்ச மாத சம்பளம் ரூ. 15 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்ட விதிகளை எந்தவித விதி விலக்கும் இன்றி அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இதில் பி.எம்.எஸ். என்ற ழைக்கப்படும் பாரதீய மஸ்தூர் சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.
தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் பஸ் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.
அண்ணா தொழிற்சங்கத்தினர் அனைவரும் இன்று வேலைக்கு வந்திருந்ததால் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 22 ஆயிரம் பஸ்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கோயம்பேடு பிராட்வே, தாம்பரம் பகுதி களில் இருந்து இயக்கப் படும் மாநகர பஸ்களும் வழக்கம் போல் வந்து சென்றன. ஆனால் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. சென்னையில் உள்ள 32 பணிமனைகளில இருந்து அனைத்து பஸ்களும் இன்று அந்தந்த வழித்தடங்களுக்கு சென்று வந்தன.
இதனால் சென்னையில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதே போல் ரெயில் சேவையும் வழக்கம் போல் இருந்தது.
ஆந்திரா, கர்நாடகா, கேளரா, புதுச்சேரி மாநிலங்களில் வேலை நிறுத்தம் தீவிரமாக இருந்ததால் தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலம் செல்லும் பஸ்கள் எல்லையில் நிறுத்தப்பட்டன.
இதில் கர்நாடக மாநிலம் செல்லும் 270 பஸ்கள் ஓசூரில் நிறுத்தப்பட்டிருந்தது. இதே போல் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய 80 பஸ்களும் வராமல் பெங்களூரில் நிறுத்தப்பட்டிருந்தது.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் 40 பஸ்கள் இன்று வரவில்லை. குமுளியில் இருந்து கேரளா செல்லும் பஸ்களும் இயக்கப்படவில்லை. செங்கோட்டையில் இருந்து கேரளாவுக்கும் பஸ்கள் செல்லவில்லை.
இதே போல் கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டிருந்தது.
ஆட்டோக்களை பொறுத்தவரை சென்னையில் வழக்கம் போல் ஆட்டோக்கள் ஓடின. ஆங்காங்கே ஒரு சில ஆட்டோக்கள் தான் நிறுத்தப்பட்டிருந்தன. தொழிற்சங்கங்களில் தீவிரமாக உள்ளவர்கள் மட்டுமே ஆட்டோக்களை இயக்கவில்லை.
தினசரி வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டுபவர்கள் வழக்கம் போல் ஆட்டோக்களை ஓட்டினர். பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வேன்களும் வழக்கம் போல் வந்து சென்றன.
காஞ்சிபுரத்தில் பொது வேலை நிறுத்தத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. காஞ்சிபுரம் மற்றும் ஓரிக்கை பேருந்து பணிமனைகள் மூலம் இயங்கும் ஏறத்தாழ 160 பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. வேலை நிறுத்தத்தின் காரணமாக ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காஞ்சிபுரத்தில் மக்களின் போக்குவரத்திற்காக பெரிதும் பயன்படும் ஷேர் மற்றும் அபே ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின.
No comments:
Post a Comment