Thursday, 3 September 2015

செப்.4 முதல் தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு - தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு |


செப்டம்பர் 4-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எந்த தமிழ்த் திரைப்படமும் வெளியாகாது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கோயம்பேடு ரோகிணி தியேட்டர் உரிமையாளர் பன்னீர்செல்வம் தன்னுடன் ஒரு தவறான கூட்டத்தை வைத்துக்கொண்டு, தொடர்ந்து தமிழ் சினிமாவை அழிக்கும் வேலை செய்துவருகிறார். இதன் தொடர்ச்சியாக 'பாயும்புலி' திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கட்டப்பஞ்சாயத்து செய்துவருகிறார். தங்களுக்கு ஒரு பெரும்தொகை தரவேண்டும் என்றும், அந்தத் தயாரிப்பாளரை மிரட்டி வருகிறார்.
இதனை கண்டிக்கும் வகையிலும், இதற்கு தீர்வு காணும் விதத்திலும் வருகிற 04.09.2015 முதல் அனைத்துத் திரைப்படங்களும் தமிழகம் முழுவதும் திரையிடுவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தமிழ் திரையுலகை மீட்டுத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்'' என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 'லிங்கா' விவகாரத்தில் இன்னும் பலரும் பணம் தரவேண்டியது இருப்பதால், வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 'பாயும் புலி' படத்துக்கு பல்வேறு ஏரியாக்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் தடை போட இருந்ததாக சொல்லப்பட்டது.
திரையரங்க உரிமையாளர் பன்னீர் செல்வம், விநியோகஸ்தர் சிங்காரவேலன் ஆகியோர் 'பாயும்புலி' திரைப்படம் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனால், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு மற்றும் நிர்வாகிகள், தயாரிப்பாளர்கள் சேர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்று விநியோகஸ்தர் சிங்காரவேலன் மீது ஒரு புகார் மனு கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment