Tuesday, 1 September 2015

மரண தண்டனையை ஒழித்திட மத்திய அரசு முன்வர வேண்டும்: தி.மு.க தலைவர் கருணாநிதி வலியுறுத்தல்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
2007–ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மன்றம் தூக்குத் தண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை முன் வைத்த போது, அதை 104 நாடுகள் ஆதரித்துக் கையெழுத்திட்டன; இந்தியா உட்பட 39 நாடுகள் தான் அதை எதிர்த்து வாக்களித்தன; ஐ.நா. தீர்மானத்தையொட்டி உலகின் 90 சதவிகித நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்து விட்டன. அந்தப் பெரும்பான்மையுடன் இந்தியாவும் இணைய வேண்டாமா என்றும் நான் ஏற்கனவே விடுத்த அறிக்கையில் கேட்டிருந்தேன்.
ஆனால் ஒரு சிலர், தீவிரவாதம் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் மரண தண்டனையை நீக்கி விட்டால் குற்றச்செயல்கள் இன்னும் பெருகி விடும் என்பது, அந்தத் தண்டனையை ஆதரிப்பவர்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் தான் மரண தண்டனை இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற பொருள் பற்றி ஆராய்ந்திட, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஷா தலைமையில், ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட “சட்ட ஆணையம்” ஒன்றினை 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பணித்தது. மரண தண்டனை முற்றிலுமாக சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டுமென்ற என்னுடைய வலியுறுத்தலை அடிப்படையாக வைத்து மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர், கவிஞர் கனிமொழி அந்தக் கருத்தை இந்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் மூலமாகத் தெரிவித்ததோடு, அந்த ஆணையம் நடத்திய ஆலோசனையிலும் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தார்.
அண்மையில் மறைந்த இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர், மேதகு அப்துல் கலாம் கூட மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டுமென்ற இந்தச் சட்ட ஆணையத்திடம் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் இந்தச் சட்ட ஆணையம் அளித்த இறுதி அறிக்கையில், தீவிரவாதம், தேச விரோதச் செயல்கள் தொடர்பான குற்றங்களைத் தவிர்த்து பிற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை ரத்து செய்து விடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிப்பதால், குற்றங்கள் தடுக்கப்படும் என்பது ஒரு கற்பனையான கருத்து என்றும் அதன் பரிந்துரையில் தெரிவித்திருக்கிறது.
இந்த சட்ட ஆணையத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அரசுப் பிரதிநிதிகளான மூன்று உறுப்பினர்கள் மட்டும் மரண தண்டனையை ரத்து செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
குறிப்பாக அதிலே ஒரு உறுப்பினரான பி.கே. மல்கோத்ரா கூறும்போது, ஐ.நா. பொதுச்சபையில் மரண தண்டனையை ஒழிப்பது தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்த போது, அந்தத் தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்த நிலையில், மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமென்பது அந்த முடிவுக்கு எதிராக அமைந்து விடும் என்று தான் கூறியிருக்கிறார்.
இதே பிரச்சனைக்காக 1962ஆம் ஆண்டு சட்ட ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் மரண தண்டனை நடைமுறையில் இருக்க வேண்டுமென்று பரிந்துரை செய்திருந்த போதிலும், தற்போது சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரை வரவேற்கத்தக்க நிலையிலே உள்ளது.
எனவே சட்ட ஆணையம் தற்போது செய்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு, இந்தியாவில் அனைத்துக் குற்றங்களுக்குமே மரண தண்டனை கிடையாது என்ற முடிவினை எடுத்து, அதற்கான அறிவிப்பினை உடனடியாக செய்திட முன் வர வேண்டுமென்று தி.மு.க.வின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.




No comments:

Post a Comment