Tuesday, 1 September 2015

மரண தண்டனையை ஒழிக்க சட்ட நடவடிக்கை: மத்திய அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை



சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் பயங்கரவாதம் தவிர்த்த பிற வழக்குகளில் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான சட்ட ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது. இந்த அறிக்கையை மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடாவிடம் நீதிபதி ஏ.பி.ஷா நேற்று நேரில் தாக்கல் செய்திருக்கிறார்.
தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக சட்ட ஆணையம் கூறியுள்ள கருத்துக்கள் ஏற்கத் தக்கவை. "கொடிய குற்றங்களை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்குவதை விடுத்து வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கும் தண்டனையை வழங்கலாம். தூக்கு தண்டனை குற்றங்களை குறைக்காது" என்று சட்ட ஆணையத் தலைவர் நீதிபதி ஏ.பி.ஷா தெரிவித்துள்ள கருத்துக்கள் மறுக்க முடியாதவை.
இந்தியாவில் கொடூரக் கொலை வழக்குகளில் மட்டுமே தூக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கொலைக்கு தண்டனை இன்னொரு கொலை என்பது சரியான தண்டனையாகவும் இருக்காது; சரியான தீர்வாகவும் இருக்காது.
கண்ணுக்கு கண்... பல்லுக்கு பல் என்ற தண்டனை தத்துவம் மன்னராட்சிக் காலத்தில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். நாகரீகம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் தூக்குத் தண்டனை என்பது கொடூரமானதும், மனித உரிமையை மீறியதும் ஆகும்.
ஒருவர் செய்த குற்றத்திற்காக தண்டனை வழங்குவது அவர் அதுபோன்ற குற்றங்களைத் திரும்பவும் செய்யக்கூடாது என்பதற்காகத் தான். அவ்வாறு இருக்கும் போது குற்றத்திற்காக ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிப்பது மனிதர்களை திருத்துவதற்கு வழி செய்யாது.
இந்தியாவில் காலங்காலமாக தூக்கு தண்டனை நடைமுறையில் இருக்கும் போதிலும் குற்றங்கள் குறையவில்லை என்பதிலிருந்தே இதை அறியலாம்.
இதே கருத்தை தான் நீதிபதி ஷா தலைமையிலான சட்ட ஆணையமும் கூறியுள்ளது. மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் எழுப்பப்பட்டு வரும் கோரிக்கை முழக்கத்தின் வெற்றியாகவே சட்ட ஆணையத்தின் இந்த பரிந்துரையை மத்திய அரசு பார்க்க வேண்டும்.
மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இதற்காக தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கடந்த 28.08.2011 அன்று சென்னையில் மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டை நடத்தினேன்.
இந்தியாவிலுள்ள பெரும்பான்மையினரின் கருத்தும் மரண தண்டனைக்கு எதிராகவே உள்ளது. அகிம்சையையும், சகிப்புத் தன்மையையும் உலகிற்கு கற்றுக் கொடுத்தது இந்தியா தான்.
அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்று போதித்த புத்தரும், எறும்புக்கு கூட தீங்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தாம் செல்லும் பாதையை மயிலிறகு மூலம் தூய்மைப்படுத்திய மகாவீரரும், அகிம்சையை போதித்த காந்தியடிகளும் வாழ்ந்த நாடான இந்தியாவில் தூக்குத் தண்டனை இன்னும் நீடிப்பது அந்த மகான்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
உலகில் 103 நாடுகளில் தூக்குத் தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. 50 நாடுகளில் தூக்கு தண்டனை அதிகாரப்பூர்வமற்ற வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
6 நாடுகளில் சாதாரண குற்றங்களுக்கு தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்தியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட 36 நாடுகளில் மட்டுமே மரண தண்டனை இன்னும் நடைமுறையில் உள்ளது.
தூக்கு தண்டனையை தொடருவதன் மூலம் இந்தியா எதையும் சாதித்து விட முடியாது. தூக்கு தண்டனையை ஒழிப்பதன் மூலம் இந்தியாவில் இப்போது மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் 1617 கைதிகளைக் காப்பாற்ற முடியும்.
எனவே, சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி, தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment