தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
முதல்–அமைச்சர் ஜெயலலிதா 15.9.2015 அன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் 18 கோடியே 95 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வண்ணத்துப் பூச்சி பூங்கா, ஆடவர் விடுதிக்கட்டடம், கல்லணை மற்றும் வைகை அணை சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்,
மண்டல கலை பண்பாட்டு மைய வளாகங்கள், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளுக்கான கூடுதல் கட்டடங்கள், கலை பண்பாட்டு இயக்கக இரண்டாம் தளக் கட்டடம், அரசு அருங்காட்சியகத்தில் காட்சியமைப்புடன் கூடிய இருப்பறை கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மக்களின் மனமகிழ்வுக்கு மூலக் கூறாகவும், வேலை வாய்ப்பினையும், அன்னியச் செலாவணியையும் ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் சுற்றுலாவை மேம்படுத்துதல், அரியகலைச் செல்வங்களைப் பேணிப் பாதுகாத்தல், தொடர்ந்து அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, புதிய சுற்றுலா மையங்களை தெரிவு செய்தல்,
சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் – வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க வசதியாக 6.7 ஏக்கர் நிலப் பரப்பளவில், 60 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம், 6 மீட்டர் உயரத்துடன் கம்பளிப் பூச்சி வடிவில் சூரிய ஒளி உட்புகுந்து தரையில் படும் வகையில் வெண்ணிற மேற் கூரையுடன் கூடிய உள்ளரங்க பாதுகாப்பகம், வண்ணத்துப் பூச்சிகள் வளர்வதற்கேற்ப உள்ள சுற்றுச் சூழலுடன் கூடிய 200 வகை மரம், செடி, கொடிகளுடன் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப் பூச்சி பூங்கா;
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்க தொழில் நுட்பவியல் நிறுவனத்தில், 11,237 சதுர அடி கட்டட பரப்பளவில், அறை ஒன்றுக்கு மூவர் வீதம் 60 மாணவர்கள் தங்கும் வசதியுடன் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 அறைகள் கொண்ட ஆடவர் விடுதிக்கட்டடம்;
தஞ்சாவூர் மாவட்டம் – கல்லணையை பார்வையிட வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொது மக்கள் பயன் பெறும் வகையில் 3 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள காவேரி ஆறு விளக்கக் கூடம், மீன் காட்சியகம், மேம்படுத்தப்பட்ட பூங்கா, தொலைநோக்கி கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள்;
தேனிமாவட்டம் – வைகை அணையை பார்வையிட வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொது மக்கள் பயன் பெறும் வகையில் 3 கோடியே 67 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பூங்கா, மீன் காட்சியகம், கழிவறைகள், மின் விளக்குவசதி, குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், மிதி படகுகள், இளைப்பாறும் கூடம்;
சேலம் மாவட்டம் – தளவாய் பட்டியில், 1 ஏக்கர் நிலப் பரப்பளவில், 1 கோடியே 7 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், மண்டல கலை பண்பாட்டு அலுவலகம், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் ஆகியவற்றை உள்ளடக்கிய சேலம் மண்டல கலை பண்பாட்டு மைய வளாகம்;
திருநெல்வேலி மாவட்டம் – பாளையங் கோட்டை வட்டம், குலவணிகபுரத்தில் 21,800 சதுர அடி நிலப் பரப்பளவில், 1 கோடியே 13 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், மண்டல கலை பண்பாட்டு அலுவலகம், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் ஆகியவற்றை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டு மைய வளாகம்;
கோயம்புத்தூர் மாவட்டம் – மலுமிச்சம்பட்டியில் 1.06 ஏக்கர் நிலப் பரப்பளவில் 1 கோடியே 89 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிக்கான புதிய கட்டடம்;
தஞ்சாவூர் மாவட்டம் – திருவையாறு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 6555 சதுர அடி கட்டட பரப்பளவில் 61 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல்தளக் கட்டடம்;
சென்னை– எழும்பூரில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி வளாகத்தில் 5644 சதுர அடி கட்டட பரப்பளவில் 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலை பண்பாட்டு இயக்கக இரண்டாம் தளக்கட்டடம்; சென்னை–எழும்பூரில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் 2530 சதுர அடி கட்டட பரப்பளவில், 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ள காட்சியமைப்புடன் கூடிய இருப்பறை கட்டடம் என மொத்தம் 18 கோடியே 95 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான சுற்றுலா துறை, கலை பண்பாட்டுத் துறை மற்றும் அருங்காட்சியகத் துறை கட்டடங்களை முதல்– அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
அருங்காட்சியகத் துறை சார்பில் ‘‘திருப்புடை மருதூர் சுவரோவியங்கள் மற்றும் மரச் சிற்பங்கள்’’, ‘‘சென்னை அரசு அருங்காட்சியக அமராவதி சிற்ப காட்சிக் கூட புனரமைப்பு மற்றும் அமராவதி சிற்பங்கள் வேதியியப் பாதுகாப்பு பணிகளின் தொகுப்பேடு’’ ‘‘சென்னை அரசு அருங்காட்சியக படிமங்கள் பற்றிய கையேடு’’ஆகிய மூன்று நூல்கள்;
தொல்லியல் துறை சார்பில் அரசினர் கீழ்த்திசை ஓலைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள பழமையான ஓலைச் சுவடிகளிலிருந்து படிக்கப்பட்டு, பதிப்பிக்கப்பட்டு, மறு அச்சிடப்பட்ட சப்தரிஷி நாடியின் ‘‘மேஷலக்கனம்’’, ‘‘விருஷ பலக்கனம்’’, ‘‘மிதுனலக்கனம்’’, ‘‘கடகலக்கனம்’’, ‘‘சிம்மலக்கனம்’’ மற்றும் ‘‘கன்னியாலக்கனம்’’ ஆகிய ஆறு நூல்கள், என மொத்தம் ஒன்பது நூல்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி, தொல்லியல் துறை ஆணையர், கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆணையர் கார்த்திகேயன், சுற்றுலாத் துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஹர் சஹாய்மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment