சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக ஜூன் மாதம் 26ல் கிடந்தார். தற்கொலை எனக்கூறி போலீசார் விசாரித்து வந்த நிலையில், காதல் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டார் என்று பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கொலை வழக்காக பதிவு செய்து திருசெங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
திருசெங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில் பலரை கைதும் செய்துள்ளார். முக்கிய குற்றவாளியாக கூறப்படும் யுவராஜ் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில் திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது மரணம் குறித்து கோகுல்ராஜின் தாய் கூறியதாவது:–
டி.எஸ்.பி தற்கொலை செய்யும் அளவிற்கு கோழை இல்லை. தனது மகனின் கொலை வழக்கை நேர்மையாக விசாரித்து வந்தார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து இறந்து இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
தனது மகனின் கொலை வழக்கு விசாரணையை தடுக்கும் வகையில் நெருக்கடி கொடுத்த காரணத்தால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. எனது மகனின் கொலை வழக்கையும், திருசெங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலைக்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
என்ஜினீயர் கோகுல்ராஜின் உறவினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகியுமான வசந்த் கூறும்போது, ‘டி.எஸ்.பி. தற்கொலை குறித்து தமிழக அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும்’ என்றார்.
No comments:
Post a Comment