Monday, 14 September 2015

வைகோவின் முயற்சியால் மீண்டும் தமிழ் மண்ணில் கால் வைத்துள்ளேன்: பினாங் துணை முதல்வர் ராமசாமி கண்ணீர் உருக்கம்




பிரதமர் மோடி மற்றும் வைகோ முயற்சியால் மீண்டும் தமிழ் மண்ணில் கால் வைத்துள்ளேன் என மலேசியாவின் பினாங் மாநில துணை முதல்வர் ராமசாமி தெரிவித்தார்.
திருப்பூர், பல்லடம் அருகே மதிமுக சார்பில் நடைபெற உள்ள அண்ணாவின் 107-வது பிறந்த நாள் விழா மற்றும் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக, கோவைக்கு விமானம் மூலம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் நேற்று வந்தார் பினாங் துணை முதல்வர் ராமசாமி.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனது பூர்வீகம் வெள்ளக்கோயில்தான். கடந்த 1920-ம் ஆண்டில் எனது தாத்தா, அப்பா உள்ளிட்டோர் பினாங்குக்கு குடிபெயர்ந்தனர். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பினாங்கில்தான். வெள்ளக்கோயிலுக்கு 5 முறை வந்து சென்றுள்ளேன். இருப்பினும், கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் மண்ணில் காலடி எடுத்து வைக்க முடியாத நிலை எனக்கு இருந்தது.
தற்போது, பிரதமர் மோடி, வைகோவின் முயற்சியால் மீண்டும் தமிழ் மண்ணில் கால் வைத்துள்ளேன். எங்களைப் பொறுத்தவரை தமிழீழம் உருவாக வேண்டும் என்பதே விருப்பம். இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணையை ஏற்றுக் கொள்ள முடியாது. சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால்தான் நியாயம் கிடைக்கும்.
சர்வதேச விசாரணைக்கு இந்தியா மட்டும் இல்லாது உலக நாடுகளும் வலியுறுத்த வேண்டும் என்றார்.
உடன் இருந்த வைகோவிடம், காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளராக இருந்த சோமு, திமுகவில் இணைந்தது குறித்து கேட்ட போது, அது குறித்து தனக்கு தெரியாது எனக் கூறிவிட்டு புறப்பட்டார்.

No comments:

Post a Comment