Friday, 18 September 2015

ம.தி.மு.க.வை உடைக்க தி.மு.க. முயற்சி: ம.தி.மு.க பலமிக்க இயக்கமாக மாறி வருகிறது - வைகோ


மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ம.தி.மு.க.வை உடைக்க தி.மு.க. கடுமையாக முயற்சி செய்கிறது. இந்த இயக்கத்தை யாராலும் எதுவும் செய்யமுடியாது. ம.தி.மு.க. தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. பதவியில் இருந்த ஒன்றிரண்டு பேர் வெளியே சென்றுள்ளனர். மாநாட்டிற்கு பின்னர் ம.தி.மு.க. மிகவும் பலம் வாய்ந்த இயக்கமாக மாறி வருகிறது.

சுதந்திர தமிழ் ஈழத்தினத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளதை வரவேற்று உள்ளேன். இதனால் உலக தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணை நடத்த கூடாது, சர்வதேச விசாரணைதான் நடத்த வேண்டும் என வலியுறுத்தினேன்.

பிரதமர் மோடி அரசு, காங்கிரஸ் அரசு செய்த துரோகத்தையே செய்யக்கூடாது. கடந்த 5 ஆண்டுகளாக பினாங்கு மாநில துணை முதல்-மந்திரி ராமசாமி இந்தியா வருவதற்கு விசா வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தேன். அதற்கு பிறகுதான் அவருக்கு விசா வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு வைகோ கூறினார்.

மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்-மந்திரி ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 2010 ஜனவரி மாதம் கோவை மாநாட்டிலும், மே மாதம் மதுரை மாநாட்டிலும் கலந்து கொண்டு இலங்கை தமிழர்கள் பிரச்சினைகளை தான் பேசினேன். பின்னர் இந்திய அரசு எனக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. 2014-ம் ஆண்டு பினாங்கில் மாநாடு நடத்தியபோது அங்கு வைகோ வந்திருந்தார். பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து எனக்கு விசா பெற்று தந்தார்.

வெள்ளக்கோவில் எனது பெற்றோர் பிறந்த ஊர். எனக்கு விசா வழங்கிய பிரதமர், தூதரக அதிகாரி, வைகோ ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு உள்நாட்டு விசாரணை என்பதை ஏற்க முடியாது. சர்வதேச விசாரணை தான் வேண்டும். இலங்கை பிரச்சினையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் தமிழர்களுக்கு என்ன பயன். இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்டனர். சர்வதேச விசாரணை பல நாடுகளில் நடந்து உள்ளது. ஆனால் தமிழர்களுக்கு ஏன் நடத்தப்படவில்லை. தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதனை நான் வரவேற்கிறேன்.

இவ்வாறு ராமசாமி கூறினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பினாங்கு துணை முதல்-மந்திரி ராமசாமி ஆகியோர் நேற்று மாமல்லபுரம் வந்தனர். அங்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில்:-

ம.தி.மு.க. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். ம.தி.மு.க.வை விட்டு யார் சென்றாலும் கவலை இல்லை. எம்.பி., எம்.எல்.ஏ. பதவி சுகம் அனுபவித்து சென்றவர்கள் பற்றியும், இனி எம்.எல்.ஏ., எம்.பி. பதவி கிடைக்கும் என்று கனவு கண்டு சென்றவர்கள் பற்றியும் கவலைப்பட போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment