Wednesday, 16 September 2015

கிராமங்களில் வீடு, வீடாக சென்று மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்: திருமாவளவன் அறிக்கை



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

மது ஒழிப்பு பிரசாரம் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில், தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் காந்தியடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2 வரையில் கிராமங்கள் தோறும் அமைதியான முறையில் அறவழியில் மதுஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருவார காலத்திற்குத் தொடர்ச்சியான பரப்பியக்கத்தை நடத்துகிறோம். 

அதாவது, `மையஅரசே, மதுவிலக்குக் கொள்கையைத் தேசியக் கொள்கையாக அறிவிப்புச் செய்' என்றும், `மாநில அரசே, மதுவிலக்குக் கொள்கையை ஏற்று, மக்கள் வாழ்வைச் சீரழிக்கும் மதுக்கடைகளை உடனே மூடு' என்றும் இரட்டைக் கோரிக்கைகளை முன்னிறுத்தி இவ்வியக்கம் ஒருங்கிணைக்கப்படுகிறது.   அரசுகளுக்கு மட்டுமே இத்தகைய பொறுப்பு உள்ளது என்று கருதாமல், மக்களுக்கும் இதில் பெரும்பொறுப்பு உண்டு என்பதை உணர வேண்டும். 

எனவே, மதுப்பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென வலியுறுத்துவதும் நமது கடமையாகும். அந்த வகையில், வீதிவீதியாக, வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வூட்டும் துண்டறிக்கைகளை வழங்குவது, தெருமுனை பிராச்சாரங்களை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். 

அத்துடன், இந்த இருவார காலமும் விடுதலைச் சிறுத்தைகள் யாவரும் கருஞ்சட்டை அணிந்துகொண்டும், `மதுவை ஒழிப்போம்! மக்களைக் காப்போம்!' என்னும் முழக்கம் பொறித்த அட்டையிலான வில்லைகளை சட்டையில் பொருத்திக் கொண்டும் பரப்பியக்கத்தில் ஈடுபடுகிறோம். 

`எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும்' என்பதைப் போல, `குடிப்பதை நிறுத்தினால் விற்பது நிற்கும்'. மதுக்கடைகளை மூடச் சொல்லும் அதே வேளையில், மதுப்பழக்கத்தைக் கை விடச் சொல்வதும்தான் மது ஒழிப்புப் பரப்பியக்கத்தின் நோக்கமாகும். தந்தை பெரியாரை தமது கொள்கை ஆசான்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ள தமிழகத்தின் ஆட்சியாளர்கள், தந்தை பெரியார், அவரது துணைவியார் நாகம்மையார், சகோதரி கண்ணம்மையார் ஆகியோர் மது ஒழிப்புக்காக ஆற்றிய பங்களிப்பை நினைவில் கொண்டு, அவர்களின்  தியாகத்தை மதிக்கும் வகையில், மதுவை ஒழிக்க, மதுவிலக்கை ஏற்க முன்வர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம். 

இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே கொள்கை அளவில் மதுவிலக்கை ஏற்றுத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். 

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment