Saturday, 19 September 2015

மம்தா பானர்ஜிக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கடிதம்



வணக்கம். வங்கத்துச் சிங்கம் நேதாஜி அவர்களைப் பற்றி, மேற்கு வங்க அரசிடம் இருந்த 64 ரகசிய ஆவணங்களைப் பொது மக்கள் பார்வைக்கு வெளிப்படுத்துவதாகத் தாங்கள் அறிவித்து இருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். அதற்காகத் தங்களுக்கு என் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த 2014 டிசம்பர் மாதம் 22 ஆம் நாள் தங்களுடன் அலைபேசியில் உரையாடியதை நினைவு கூர்கின்றேன். மத்திய அரசின் பொறுப்பில் உள்ள நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிடக் கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னையில் நடத்த இருக்கின்ற  பேரணியில் பங்கேற்று உரை ஆற்றிட, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

இதுகுறித்துத் தங்கள் கட்சியின் மூத்த தலைவர்களோடு பேசிவிட்டுத் தொடர்பு கொள்வதாகக் கூறினீர்கள். அடுத்த சில மணி நேரங்களில் என்னைத் தொடர்பு கொண்டு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மேற்கு வங்க கல்வி அமைச்சருமான மாண்புமிகு பார்த்தா சட்டர்ஜி அவர்களை அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தீர்கள். 

23.12.2014 அன்று அவர் சென்னைக்கு வந்து, எங்கள் பேரணியில் பங்கேற்று உரையாற்றிச் சிறப்பித்தார். அப்போது நான் உரை ஆற்றுகையில், ‘நேதாஜி குறித்த ஆவணங்களை மத்திய அரசு வெளியிடக் கோரி மேற்கு வங்க அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்; அதற்காகப் போராட்டம் நடத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டேன்.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் நாள் நடைபெற்றதாகக் கூறப்படும் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. அவர் ரஷ்யப் படைகளால் சிறைப் பிடிக்கப்பட்டு, சைபீரியச் சிறையில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார் என்பதை நம்பத்தகுந்த பல ஆவணங்கள் உறுதி செய்கின்றன. இந்தப் பின்னணியில் பண்டித நேருவின் அரசு, ரஷ்ய அரசுடன் இணைந்து செயல்பட்டு இருக்கின்றது. 

2015 ஆம் ஆண்டு ஜனவரி 23 நேதாஜியின் பிறந்த நாள் அன்று, தென் தமிழகத்தின் ஒரு முக்கியமான நகரமாகிய பாளையங்கோட்டையில் எங்கள் கட்சியின் சார்பில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினோம். நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிடக் கோரி இயக்கம் நடத்தி வருகின்ற தேவிபிரசாத் புருஷ்டி அவர்கள் ஒடிஷாவில் இருந்து வருகை தந்து உரையாற்றிச் சிறப்பித்தார். 

இது தொடர்பாக, 2015 மார்ச் 14 ஆம் நாள் நான் கொல்கத்தாவுக்கு வந்து  நேதாஜி குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினேன். அப்போது என்னைச் சந்திப்பதற்கு, மாண்புமிகு பார்த்தா சட்டர்ஜி அவர்களைத் தாங்கள் அனுப்பி வைத்து இருந்தீர்கள். மேலும் நான் பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பிஸ்வாஸ் உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் அனைவரையும் சந்தித்துப் பேசினேன். 

2015 மார்ச் 23 ஆம் நாள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், புது தில்லி தமிழ்ச் சங்க அரங்கில் எனது தலைமையில் ஒரு கருத்து அரங்கு ஏற்பாடு செய்து இருந்தேன். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜிந்தர் சச்சார், புகழ்பெற்ற வழக்குரைஞர்-முன்னாள் சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி, பஞ்சாபில் இருந்து பேராசிரியர் ஷைனி ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நேதாஜி குறித்த ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். 

தற்போது, மேற்கு வங்க அரசின் பொறுப்பில் உள்ள 34 ரகசிய ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதாகத் தாங்கள் அறிவித்து இருப்பது, இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும். அதுபோலவே, மத்திய அரசின் பொறுப்பில் உள்ள 130 ரகசிய ஆவணங்களையும் வெளியிடக் கோரி வலியுறுத்தி இருக்கின்றீர்கள். அந்த ஆவணங்கள் வெளியிடப்படுமானால், வீரஞ்செறிந்த விடுதலைப் போரை நடத்திய, அளப்பரிய தியாகத்தைச் செய்த அந்தத் தலைவரின் புகழ் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வைர வரிகளாகப் பொறிக்கப்படும். 

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அந்த ஆவணங்களை வெளியிடத் தவறினால், இந்திய தேசிய அளவில் ஒரு போராட்டத்தைத் தாங்கள் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், அத்தகைய போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஒத்துழைப்பு நல்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

No comments:

Post a Comment