Thursday, 17 September 2015

ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் பான்னாட்டு விசாரணைக்கான தீர்மானம் இந்திய அரசு துரோகம் செய்தால், விளைவுகள் விபரீதமாகும்! வைகோ அறிக்கை



இலங்கைத் தீவில் கோரமான ஈழத் தமிழ் இனப்படுகொலை நடத்திய சிங்களப் பேரினவாத அரசாங்கத்தையும், அதை நடத்திய மாபாதகன் ராஜபக்சே கூட்டத்தையும், சரத் பொன்சேகா உள்ளிட்ட சிங்கள இராணுவத்தினரையும் அனைத்துலக நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி உரிய தண்டனைக்கு ஆளாக்கும் தீர்வினை நோக்கி முதல் கட்ட நகர்வாகவே செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை ஆணையர் அல் சையத் ராஃப் உசேன் அறிக்கையும், கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினரான மார்ட்டி அட்டிசாரி, சில்வியா கார்ட்ரைட், ஆÞமா ஜஹாங்கீர் தாக்கல் செய்த அறிக்கையும் அமைந்துள்ளன.
இதில் மனித உரிமை ஆணையர் கொடுத்த அறிக்கை 19 பக்கங்களைக் கொண்டதாகவும், மூவர் குழு அறிக்கை 268 பக்கங்களைக் கொண்டதாகவும் உள்ளன.
மூவர் குழு அறிக்கையில், ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள் என்பதற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஜோசப் பரராஜசிங்கம் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழர்களும், ஆழிப் பேரலை நிவாரணத்தில் ஈடுபட்ட 17 இளந்தமிழர்களும், 2006 இல் ஐந்து யாழ்ப்பாண மாணவர்களும் படுகொலை, செஞ்சோலையில் சின்னஞ்சிறு குழந்தைகள் படுகொலை, பத்திரிகையாளர்கள் படுகொலை, மனித உரிமையாளர்கள், மீனவர்கள் படுகொலை, நெஞ்சை நடுங்கச் செய்த சம்பவமான இசைப்பிரியா நாசம்செய்து படுகொலை, இளந்தளிர் பாலச்சந்திரன் படுகொலை, எட்டு தமிழர்கள் நிர்வாணமாகக் கண்கள் கட்டப்பட்டு சுட்டுப் படுகொலை, வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்த நடேசன், அவரது மனைவி வினிதா, புலித்தேவன், கர்ணல் ரமேஷ் உள்ளிட்டோர் சிங்கள இராணுவத்தாலும், சிங்கள அரசு அமைத்த துரோகக் குழுக்களால் படுகொலை ஆகிய அனைத்துக் கொடூரச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
2009 ஜனவரிக்குப் பின்னர் யுத்த சூன்ய பிரதேசம் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களைப் பட்டினிபோட்டு சாகடித்ததும், புது மத்தளான், புதுக்குடியிருப்பு, அம்பலவான் பொக்கனை ஆகிய இடங்களில் இருந்த மருத்துவமனைகள் மீது சிங்கள இராணுவம் பீரங்கிகளால் தாக்கியும், விமானங்களால் குண்டு வீசியும் தமிழர்களைக் கொன்றதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மூவர் குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் வெறும் போர்க்குற்றங்கள் அல்ல, இனப்படுகொலைக்கான சாட்சியங்களாகும்.
இதுகுறித்து மனித உரிமை ஆணையர் சையத் உசேனிடம் கேட்டபோது, இதுவரை கிடைத்துள்ள போர்க் குற்ற ஆதாரங்கள் போதுமானவை அல்ல, இன்னும் பல ஆதாரங்கள் கிடைத்தால்தான் இனப்படுகொலை எனக் கருதப்படும் என்று பதிலளித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையர் 2014 இல் நியமித்த மூவர் விசாரணைக் குழுவை இலங்கைக்கு உள்ளேயே சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. ஈழத் தமிழ் அகதிகள் தஞ்சம் தேடி வந்த தமிழகத்திற்கும் வர இந்திய அரசு அனுமதிக்கவில்லை. எனவே, அனைத்துலக விசாரணை இன்னும் வலுவாக அமைக்கப்பட்டு, இலங்கைத் தீவில் தமிழர்கள் படுகொலைக்கு ஆளான பகுதிகளையும், தமிழகத்திலும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டால் இனக்கொலைக்கான ஏராளமான ஆதாரங்கள் உறுதியாகக் கிடைக்கும்.
கடந்த வருடம் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு 2002 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சம்பவங்கள் குறித்து மட்டுமே விசாரணை மேற்கொண்டது. ஆனால், 1948 பிப்ரவரி 4 இல் இலங்கை சுதந்திரமான நாளிலிருந்து தமிழர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதையும், ஈழத் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதையும், தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதையும், தமிழ் குழந்தைகள் ஈவு இரக்கமின்றி சாகடிக்கப்பட்டதையும், தமிழர்களின் நூலகம் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டதையும், இந்தப் பின்னணியில் 1976 மே 14 இல் வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா செய்த சுதந்திரத் தமிழ் ஈழ பிரகடனத்தையும், 1983 கருப்பு ஜூலையில் வெலிக்கடை சிறை படுகொலை உள்ளிட்ட தமிழர் படுகொலைகளையும், 1995 இல் ஐந்து இலட்சம் தமிழர்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேற நேர்ந்தது உள்ளிட்ட 2014 வரை ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அனைத்துக் கொடுமைகளையும் முழுமையாக ஆய்ந்து அறிய பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைக்கும் விதத்தில், அக்டோபர் 2 வரை நடைபெறும் ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலின் 30ஆவது அமர்வுக் கூட்டத்தில் உறுப்பு நாடுகள் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
நீதியைப் புதைத்து சிங்கள அரசை பாதுகாக்கும் குறிக்கோளுடன் அமெரிக்க உள்ளிட்ட எந்த நாடு தீர்மானம் கொண்டுவந்தாலும் அந்தத் தீர்மானத்தை உறுப்பு நாடுகள் தோற்கடிக்க வேண்டும்.
அப்படி அமைக்கப்படும் அனைத்துலக விசாரணை நீதிமன்றத்தில் இலங்கையைச் சேர்ந்த எவரும் நீதிபதிகளாகவோ, வழக்காடுபவராகவோ இடம்பெறக் கூடாது. இலங்கையைச் சேர்ந்த தமிழர்களே நியமிக்கப்பட்டாலும் நீதி கிடைக்காது என்று இலங்கையின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய வடக்கு மாகாண முதல்வருமான விக்னேÞவரன் அவர்களே மிகச் சரியாகக் கூறியுள்ளதை மனித உரிமை கவுன்சில் கவனத்தில்கொள்ள வேண்டும்.
மனித உரிமைக் கவுன்சில் அமைக்கும் பன்னாட்டு விசாரணைக் குழுவில் இனக்கொலை செய்த இலங்கையைச் சேர்ந்தவர்களோ, அக்கொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு பரிந்துரைப்பவரையோ அங்கம் வகிக்க இடம் தரலாகாது. இனக்கொலைக் குற்றக் கூண்டில்தான் சிங்களர்கள் நிறுத்தப்பட வேண்டும். தமிழக சட்டமன்றம் 2015 செப்டம்பர் 16 இல் நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய அரசு அங்கீகரித்து, அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
சிங்களர் எவ்விதத்திலும் இடம் பெறாத பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைக்க மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும். இதைச் செய்ய தவறினாலோ, சிங்களக் கொலைகார அரசுக்கு உதவுகின்ற செயலில் ஈடுபட்டாலோ நரேந்திர மோடி அரசும் தமிழ் இனக்கொலைக்கு துணைபோகும் அரசு என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரும் என்பதையும், அதனுடைய விளைவுகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே எதிர்காலத்தில் கேள்விக்குறியாகும் என்பதையும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திட்டவட்டமாக தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment