Tuesday, 1 September 2015

சசி பெருமாள் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன: ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ


சசிபெருமாள் மரணம் தற்கொலை அல்ல என்பதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 
காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் தொடர்பாக அவரது மகன் விவேக் சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பின்னர், தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு முதன்மை செயலாளர் ஜிதேந்திரநாத் ஸ்வைன் தாக்கல் செய்த பதில் மனுவில், சசி பெருமாள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் தம்மையும் மனுதாரராக இணைத்து கொள்ளக் கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், செல்போன் டவரில் ஏறிய சசிபெருமாளை கீழே இறக்குவதற்கு தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் முயன்ற போது, நைலான் கயிறு நழுவி, கழுத்து மற்றும் தொண்டை இறுகி சசிபெருமாள் இறந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும் வைகோ அதில் குறிப்பிட்டுள்ளார். எனவே சசிபெருமாள் மகன் விவேக் கேட்டுக் கொண்டதைப் போல, பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, இந்த மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். 

No comments:

Post a Comment