Friday, 18 September 2015

நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளை மத்திய அரசும் பகிரங்கமாக வெளியிட வேண்டும்: மம்தா பனர்ஜி வலியுறுத்தல்


மேற்கு வங்காளம் மாநில அரசைப்போல் மத்திய அரசும் தனது பாதுகாப்பில் வைத்திருக்கும் நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்திள்ளார். 

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட முடியாது என்று தகவல் ஆணையத்திற்கு பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. ஆவணங்களை வெளியிட்டால் அது இந்தியாவின் பன்னாட்டு உறவுகளைப் பாதிக்கும் என்றும் கூறியிருந்தது. 

இந்நிலையில் நேதாஜி தொடர்பான 1937 முதல் 1947ம் ஆண்டு வரையிலான ஆவணங்களை வெளியிடுவதற்காக அவற்றை கணினிமயமாக்கும் நடவடிக்கை நடந்து வருவதாகவும், இம்மாதம் 18-ம் தேதி அவற்றை வெளியிட உள்ளதாகவும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 11-ம் தேதி கூறியிருந்தார். இதனால், அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மம்தா பானர்ஜி அறிவித்திருந்தபடி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்களை சி.டி. வடிவில் மேற்கு வங்காளம் மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்காளம் மாநில போலீஸ் மற்றும் கொல்கத்தா நகர போலீசார் வசம் இருந்த பழைய கோப்புகளின் அடிப்படையிலான இந்த ஆவணங்கள் இதுவரை கொல்கத்தா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. 

12,774 பக்கங்களை கொண்ட இந்த 64 ஆவணங்களும் நேதாஜியின் குடும்பத்தார் மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இன்று பகிரங்கமாக சி.டி. வடிவில் வெளியாகியுள்ளன. அந்த சி.டி.யின் ‘ஹார்ட் டிஸ்க்’ நேதாஜியின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

கொல்கத்தா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள அருங்காட்சியத்தில் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள இந்த மூல அசல் ஆவணங்களை இன்று நேதாஜியின் குடும்பத்தாரும், பத்திரிகையாளர்களும் மட்டும் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை பொதுமக்கள் வரும் 21-ம் தேதியில் இருந்து பார்வையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள அருங்காட்சியத்தில் இந்த மூல அசல் ஆவணங்களை இன்று பார்வையிட்ட மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளம் மாநில அரசைப்போல் தனதுவசம் வைத்திருக்கும் நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை மத்திய அரசும் வெளியிட வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment