Sunday, 23 August 2015

கொழும்பு டெஸ்ட் போட்டி - கடைசி டெஸ்ட் இன்னிங்சில் சங்ககாரா 18 அவுட்; மீண்டும் அஸ்வினிடம் வீழ்ந்தார்

கொழும்பு டெஸ்ட் போட்டியில் தனது கடைசி இன்னிங்ஸில் சங்ககாரா 18 ரன்களில் அஸ்வினிடம் ஆட்டமிழந்தார். களத்தை விட்டுச் செல்லும் முன்னர் இந்திய வீர்ர்கள் சங்ககாராவுடன் கைகுலுக்கினர்.

அவர் மட்டையை உயர்த்திய படி உணர்ச்சிகளை அடக்கியபடி பெவிலியன் நோக்கி சென்றார். பலத்த கரகோஷம் எழுந்தது.

413 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடும் இலங்கை அணி முதலில் அஸ்வினிடம் சில்வா விக்கெட்டை இழந்தது. இது தேவையில்லாத விக்கெட், புல்டாஸை நேராக பின்னி கையில் கேட்ச் கொடுத்து அவர் 1 ரன்னில் வெளியேறினார். 

சங்கக்கார களமிறங்கி அவரது டிரேட் மார்க் பிளிக் பவுண்டரியுடன் 3 பவுண்டரிகள் அடித்து 18 ரன்களில் இருந்த போது அஸ்வினின் ஒரு பந்து அருமையாக திரும்ப சங்ககாராவின் தடுப்பு மட்டையின் விளிம்பை கடைசியாக ஒரு முறை பந்து முத்தமிட்டுச் சென்றது, முரளி விஜய் கல்லியில் கேட்ச் பிடித்தார்.

இந்தத் தொடரில் அஸ்வினுக்கு எதிராக சங்ககாரா 43 பந்துகளைச் சந்தித்து 22 ரன்களை மட்டுமே எடுத்து 4 முறை ஆட்டமிழந்துள்ளார். சராசரி 5.5.

பொதுவாக கடைசி டெஸ்ட் போட்டியில் நெருக்கடி நிலைமைகளை ஓய்வு பெறும் வீரர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் சங்கா விளையாடிய வரை உற்சாகமாகவே விளையாடினார். துரதிர்ஷ்டவசமாக அஸ்வினின் பந்து வீச்சு மீண்டும் ஒரு முறை அவரை வீழ்த்தியது.

இலங்கை அணி இன்னமும் 12 ஓவர்களை இன்று சந்திக்க வேண்டிய நிலையில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்துள்ளது. 

மேத்யூஸ் 13 ரன்களுடனும், கருணரத்னே 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அஸ்வின் 7 ஓவர் 3 மெய்டன் 15 ரன்கள் 2 விக்கெட்.

No comments:

Post a Comment