Wednesday 26 August 2015

திருவைகுண்டம் கடை அடைப்பும், மறியலும் திசை திருப்பும் முயற்சியே; நடுநிலையாளர்கள் பங்கேற்க வேண்டாம்! வைகோ அறிக்கை

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,

தமிழகத்தில் தோன்றி, தமிழகக் கடலிலேயே சங்கமம் ஆகும் வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணியில், 1869 ஆம் ஆண்டு திருவைகுண்டத்தில் பிரித்தானியர்களின் ஆட்சியின்போது கட்டப்பட்ட அணையால் 25,560 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று முப்போகம் விளையும் செழிப்பான பகுதியாக இருந்து வந்தது. ஆனால் இந்த அணையில் கடந்த 140 ஆண்டுகளாகத் தூர் வாரும் பணி நடைபெறாததால் மண்மேடிட்டு, வேலிக்காத்தான் அமலைச் செடிகள் வளர்ந்து, எட்டு அடி ஆழம் தண்ணீர் தேங்க வேண்டிய அணையில் ஒரு அடி மட்டுமே தண்ணீர் தேங்குவதால், ஆண்டுக்கு 20 டி எம் சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது.
விவசாயிகள் நலனுக்காகவே வாழ்நாள் முழுமையும் போராடி வருகின்ற நயினார் குலசேகரன் போன்ற விவசாய சங்கத் தலைவர்களும், விவசாயிகளும், மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் அணையில் தூர் வாரக் கோரி பல அறப்போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் அவர்கள், தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் இதுகுறித்து பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை ஏப்ரல் 9, 30, மே 8,13,28,30 ஆகிய ஆறு நாள்களில் சென்னையில் நடைபெற்றது. ஜூன் 5 ஆம் தேதி புது தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில் நீதி அரசர் ஜோதிமணி, நிபுணர்கள் பேராசிரியர் யூசுப், நாகேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. ‘மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், திருவைகுண்டம் அணையில் தூர் வாருவதற்கு தமிழக அரசுக்கு ஜூன் பத்தாம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்றும், அப்படி வழங்கத் தவறினால், அதனைப் பொருட்படுத்தாது தமிழ்நாடு அரசு தூர் வாரும் பணியை உடனே தொடங்க வேண்டும்’ என்றும் தீர்ப்பு அளித்தனர்.
‘ஜூன் 11 ஆம் தேதி மாநில அரசு அணையில் தூர் வாரும் பணிகளைத் துவங்க வேண்டும் என்றும், அதுகுறித்து ஜூலை 1 ஆம் தேதி தீர்ப்பு ஆயத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும் நீதி அரசர் ஜோதிமணி ஆணை பிறப்பித்தார்.
தமிழக விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் நோக்கத்தோடு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஏனெனில் மத்திய அரசின் தடங்கல்களால் மாநில அரசின் பெரும்பாலான பணிகள் முடக்கப்படுகின்றன. அத்தகைய தடைகள் ஏற்படினும் அதையும் மீறி மாநில அரசு செயல்பட்டு விவசாயிகள் நலனைக் காக்க இத்தீர்ப்பு வழிகாட்டியது.
எதிர்பார்த்ததற்கு மாறாக, மத்திய அரசு ஜூன் 10 ஆம் தேதியன்று அணையில் தூர் வாருவதற்குத் தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியது. ஆனால், தமிழக அரசு ஜூன் 11 ஆம் தேதி பணிகளைத் தொடங்கவில்லை.
ஜூன் 28 ஆம் தேதியன்று நான் திருவைகுண்டம் அணையைப் பார்வையிட்டேன்.
‘தூர் வாரும் பணிகளைத் தமிழக அரசு தொடங்காவிட்டால், ஜூலை 6 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டிக்கொண்டு நானே ஆற்றில் இறங்கித் தூர் வாரும் பணிகளைச் செய்வேன்; மண்டிக் கிடக்கும் மணலையும், வேலிக்காத்தான் அமலிச் செடிகளை அகற்ற வீட்டுக்கு ஒரு விவசாயி கடப்பாரை, மண்வெட்டி, இரும்புச் சட்டி, கூடை அரிவாளுடன் வாருங்கள்; பொருநை நதிப் பாசன விவசாயிகள் மட்டும் அல்ல, அனைத்து மாவட்ட விவசாயிகளும் வாருங்கள்’ என்று அறிவித்தேன். 50 பொக்லைன்களையும் களத்தில் இறக்க ஏற்பாடுகள் செய்தேன்.
நான் முன்வைத்த காலைப் பின் வைக்க மாட்டேன் என்பது அரசுக்குத் தெரியும்.
ஜூன் 30 ஆம் தேதியன்று மாலை ஐந்து மணிக்கு, பொதுப்பணித்துறையினர் தூர் வாரும் பணிக்குப் பூசை போட்டு வேலையைத் தொடங்கினர். ஜூலை 6 ஆம் தேதியன்று தூர் வாரும் பணி நடக்கும் இடங்களை நான் பார்வையிட்டேன்.
ஆகÞட் 5 ஆம் தேதி பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘அணைக்கட்டுப் பகுதியில் இருந்துதான் தூர் வாரும் வேலையைத் தொடங்க வேண்டும்; அணையின் 18 மணல் வாரி ஷட்டர்களையும் சீரமைக்க வேண்டும்; மழைக்காலம் ஆதலால் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்’ என்று நான் முன்வைத்த கோரிக்கையை நீதி அரசர் ஜோதிமணி அவர்கள் ஏற்றுக்கொண்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனைச் செயல்படுத்த வேண்டும் எனக் கூறினார். அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டனர்.
ஆகÞட் 24 ஆம் தேதி பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
‘தூர் வாரும் பணியை அணைக்கட்டில் இருந்து தொடங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கு முன்னைய விசாரணையின்போதே ஒப்புக் கொண்டனர்; தூர் வாரும் பணியை ஆற்றில் நீளவாக்கில் ஒருபக்கமாகச் செய்யக் கூடாது; ஒரே சமமான அளவில் அகலவாக்கில் பணி நடக்க வேண்டும்’ என்று நான் வலியுறுத்தினேன். அதனையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.
பொதுப்பணித்துறை தூர் வாரும் பணியை, திருவைகுண்டம் அணையில் மேற்கொள்ள ஏழு பகுதிகளாகப் பிரித்துள்ளது. அதில் முதல் பகுதி அணைக்கட்டில் இருந்து 900 மீட்டர் வரை உள்ள பகுதி ஆகும். இதற்கு 2 கோடியே 10 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவற்றுள் 6 பகுதிகள் பொதுப்பணித்துறைக்கு உரியதாகும்.
முதல் பகுதியான திருவைகுண்டம் அணைப்பகுதி மட்டும் வனத்துறையினருக்கு உரியதாகும். எனவே, அவர்களது அனுமதியைப் பெற்று, அங்கிருந்து வேலையைத் தொடங்க தமிழக அரசு ஏற்பாடு செய்து கொண்டு இருப்பதாக நான் அறிகிறேன்.
‘அணை தூர் வாரும் வேலை நடக்க இருக்கின்ற பகுதிகளில் அந்நியர்கள் யாரும் உள்ளே நுழையக் கூடாது’ என்ற அறிவிப்புப் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
முல்லைப்பெரியாறு, காவிரிப் பிரச்சினைகளில் தமிழ்நாடு அரசு சரியான நிலைப்பாட்டை மேற்கொண்டதை நான் பாராட்டி இருக்கின்றேன்.
அதுபோலவே திருவைகுண்டம் அணையில் அணைக்கட்டுப் பகுதியில் இருந்து தூர் வாரும் பணியைத் தொடங்க ஆயத்த வேலைகள் நடைபெற்று வருவதாலும், அத்துடன் மேட்டூர், பேச்சிப்பாறை, வைகை, அமராவதி ஆகிய நான்கு அணைகளிலும் தூர் வாரும் பணி செய்ய முன்வந்து இருப்பதாலும் தமிழக அரசை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
தமிழக அரசு வேலையைத் தொடங்க இருக்கும் வேளையில், இதனை ஒரு கோரிக்கையாக முன்வைத்து, அதற்காகத் திருவைகுண்டம் பகுதியில் கடை அடைப்பு மறியல் நடத்தப் போவதாக ஒருசிலர் அறிவித்து இருப்பது மிகத்தவறான அணுகுமுறை ஆகும்.
யானை மீது உட்கார்கின்ற ஈ, நான்தான் யானையை வழிநடத்துகிறேன் என்பது போன்ற செயல் ஆகும்.
மாமனிதர் அப்துல் கலாம் மறைந்தபோதும், மது எதிர்ப்புப் போராளி சசிபெருமாள் சாகடிக்கப்பட்டபோதும் வருமான இழப்பு குறித்துக் கவலைப்படாமல் வணிகப் பெருமக்கள் கடைகளை அடைத்தார்கள்.
இந்நிலையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று திருவைகுண்டம் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள கடை அடைப்பு, மறியல் போராட்டத்தில் நடுநிலையாளர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ கேட்டுக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment