ஓணம் பண்டிகையையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,ஆணவம், அகம்பாவம், வஞ்சகம், போன்ற கொடிய குணங்கள் மனித சமுதாயத்தில் இருந்து களையப்பட வேண்டும்.
பொறுமை, அன்பு, அமைதி ,மனிதநேயம் முதலிய நற்பண்புகள் போற்றி வளர்க்கப்பட வேண்டும் என ஓணம் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பா.ஜ.க கட்சி முன்னாள் மாநில தலைவரும், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:–
மன்னன் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காலந்தோறும் நிறைவேற்ற வேண்டும் என்பதும் தான் ஆண்ட மண்ணின் மக்கள் சத்தியம் தவறாததும் ஆட்சியாளனின் கைகளில் மகிழ்வோடு இருப்பதைப் பார்த்து மகிழ முடிவு செய்த மகாபலி சக்ரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் திருவோணப்பண்டிகையின் போது பூமியில் எழுந்தருளி தான் ஆண்ட மண்ணையும், மக்களையும் மகிழ்வித்து வருகிறார்.
மகாபலி சக்ரவர்த்தியை மகிழ்வோடு எதிர்பார்த்து திருவோணம் கொண்டாடும் நாம் அனைவரும் சத்தியம் தவறாமல் தர்மத்தின் வழியில் வாழ்க்கை நடத்தி மகிழ்வோடு மகாபலி சக்ரவர்த்தியை வணங்கி வரவேற்று மகிழ்வோம். அனைவருக்கும் எனது திருவோணத்திருநாள் வாழ்த்துக்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:–
மகாபலி சக்கரவர்த்தியின் ஆட்சியிலே சண்டை, சச்சரவு, துன்பம் ஏதுமின்றி மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்ததாகவும், அந்த மன்னன் வரம் பெற்று திருவோணத்தன்று நாட்டு மக்களை சந்திக்க வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த நன்நாளையே ஓணம் பண்டிகை என்றழைத்து கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த இனிய நன்னாளில் கேரள மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று, எல்லா வளமும் பெற்று, நல்வாழ்வு வாழ வேண்டும் என நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:–
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளன்று ‘ஓணம்’ பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இதனை அறுவடைத் திருநாள் எனவும் அவர்கள் அழைக்கிறார்கள்.
ஓணம் திருநாளில் அல்லதைத் துறந்து, நல்லதைப் பெற்று, மனம் மகிழ்ந்து வளம் செழிக்க வாழ வேண்டும். தமிழக மக்களும், கேரள மக்களும் இணக்கமாக வாழ்ந்து தேசத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று என் இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:–
மத வேறுபாடுகள் ஆங்காங்கே வேரூன்றி மக்களைப்பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், இப்படிப்பட்ட பண்டிகைகளை ஒற்றுமை உணர்வுடன் கொண்டாடும் போது மத நல்லிணக்கம் வலுப்பெறும். மலையாள மக்களின் பண்பாட்டை, சிறப்புக்களை ஒற்றுமையை பிரதிபலிக்கும் இந்த இனிய நாளில் தமிழகத்திலும், கேரளத்திலும் மற்றும் உலகமெங்கும் வாழும் மலையாள சகோதர–சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:–
ஓணம் பண்டிகை திருநாளில், மலையாள மொழி பேசும் மக்கள் புத்தாடைகள் அணிந்து, அதிகாலையிலேயே கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி, பின்னர் உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தங்கள் அன்பையும், பாசத்தையும் பரிமாறிக் கொள்வார்கள். இது போன்ற விழாக்கள்தான், அனைத்து தரப்பு மக்களையும் மதம், இனம், மொழிகளை கடந்து ஒருங்கிணைக்கின்றன. தமிழகத்தில் வாழும் மலையாள இன சகோதர, சகோதரிகளுக்கு எனது இனிய ‘ஓணம் பண்டிகை’ திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
No comments:
Post a Comment