Monday 24 August 2015

ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்: ம.தி.மு.க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஜோயல், தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார்குலசேகரன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணிகளை பார்வையிட்டனர். அப்போது மாவட்ட மதிமுக. செயலாளர் ஜோயல் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாருவதற்கான உத்தரவு கிடைத்துள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியின் மூலமாகவே நாங்கள் மனநிறைவு பெற்றுள்ளோம்.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி அணைக்கட்டு பகுதியில் இருந்து தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறையினர் துரிதமாக தொடங்க வேண்டும். தூர்வாரும் பணிகளை தொய்வின்றி விரைவாக மேற்கொண்டு, வரும் மழைக்காலத்திற்கு முன்பாக முடித்திடவேண்டும்
அணையின் தூர்வாரும் பணி நடைபெறும் பகுதியில் "அந்நியர்கள் யாரும் உள்ளே நுழையக்கூடாது" என்று பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளது கண்டனத்திற்குரியதாகும். ஏனெனில் அணையின் தூர்வாரும் பணிகள் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் அறிந்திடும் வகையில் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடந்திடவேண்டும். இப்பணிகளை மறைக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. எனவே பொதுப்பணித்துறையினர் இந்த அறிவிப்பு பலகையை உடனடியாக அகற்றவேண்டும்.
அணையின் தூர்வாரும் பணிகளை அணைக்கட்டு பகுதியில் இருந்து, அதாவது 8 அடி ஆழத்தில் 420 மீட்டர் அகலத்திற்கு பாரபட்சமின்றி முறையாக மேற்கொள்ளவேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment