Thursday, 27 August 2015

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து



திருவோணத் திருநாளான இந்நன்னாளில், இல்லந்தோறும் அன்பும் அமைதியும் நிலவட்டும், மகிழ்ச்சியும் செல்வமும் பெருகட்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். 
.
முதலமைச்சர் ஜெயலலிதாகூறியிருப்பதாவது:-பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்திட வாமன அவதாரம் பூண்ட திருமால், அச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி ஒப்புக் கொண்டவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த திருமால், மூன்றாம் அடியை எங்கே வைப்பது என்று கேட்க, அதற்கு மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய தலையை காண்பிக்க, திருமால் மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் கால் வைத்து பாதாளத்திற்குள் வீழ்த்தினார்.

அச்சமயம் ஆண்டுதோறும் தன்னுடைய மக்களை காண வேண்டுமென்ற மகாபலி சக்கரவர்த்தியின் விருப்பத்தினை திருமால் ஏற்று அருள் புரிந்தார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று மக்களைக் காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக ஓணம் திருநாள் மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது.

சாதி, மத பேதமின்றி மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் வண்ணப் பூக்களால் அத்தப்பூக் கோலமிட்டு, புத்தாடை அணிந்து, ஓண விருந்துண்டு, மோகினி ஆட்டம், கோலாட்டம் போன்ற நடனங்களை ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

திருவோணத் திருநாளான இந்நன்னாளில், இல்லந்தோறும் அன்பும் அமைதியும் நிலவட்டும், மகிழ்ச்சியும் செல்வமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment