Friday 28 August 2015

அரசியல் கட்சி தலைவர்கள் நாகரீகமாக பேச வேண்டும்: அரக்கோணத்தில் ஜி.கே.வாசன் பேட்டி - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சாடல்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் மோடி, தமிழகத்தில் உள்ள சென்னைக்கு வந்து அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதையும், அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்தும் கருத்து தவறாக தெரிவித்த சம்பவமும், அதை தொடர்ந்து பா.ஜ.க வும், அ.தி.மு.க கட்சிகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டது அனைவரும் தெரிந்தது. இந்நிலையில் ஜி.கே வாசன் அரசியல் கட்சி தலைவர்கள் நாகரீகமாக பேச வேண்டும் என அரக்கோணத்தில் ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளது, மீண்டும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.


அரக்கோணத்தில் த.மா.கா. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாறுபடும் போது எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைப்பதில்லை. ஆகவே மத்திய அரசு தலையிட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்.
அவ்வாறு விலை குறையும்பட்சத்தில் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் குறைந்து விடும். நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.
தமிழ்நாட்டில் தற்போது பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எனவே, விவசாய கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
அதே போல் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு கொள்முதல் விலை ரூ.4 ஆயிரமாக உயர்த்த வேண்டும். தற்போது நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் அடிக்கடி வெளிநடப்பு செய்து வருகின்றனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் மக்களின் குறைகளை பேசி அந்தந்த தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதற்கு கட்சி பாகுபாடின்றி சட்டமன்றத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பு அளிக்க வேண்டும்.
ஆகஸ்டு 3–ந் தேதி முதல் மக்களின் குறைகளை கேட்டறிய முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் சூறாவளி சுற்றுபயணம் செய்ய உள்ளேன். பின்னர் ஜனவரியில் அடுத்தகட்ட சுற்றுபயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டு அறிய உள்ளேன்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். தமிழக அரசு இந்த சட்டமன்ற கூட்ட தொடரில் மதுவிலக்கை அமல்படுத்தினால் நன்றாக இருக்கும். இல்லையெனில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது பற்றி ஜனவரி மாதத்திற்கு மேல்தான் தமிழ் மாநில காங்கிரஸ் முடிவு செய்யும். கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டு எந்த அணியுடன் கூட்டணி என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவர்களாக நடப்போம். தேர்தலில் தனியாக போட்டியிட அனைத்து கட்சிகளும் அறிவிப்பு வெளியிட்டால் த.மா.கா.வும் அதற்கு விதிவிலக்கல்ல.
அரசியல் கட்சி தலைவர்கள் பொது வாழ்வில் நாகரீகமாக பேச வேண்டும். வரம்பு மீற கூடாது. தொண்டர்கள் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment