Sunday 30 August 2015

இல்வாழ்க்கை என்பது தலையாய அறம் - சேலம் நகரத்தார் சங்க பொன் விழா கருத்தரங்கில் கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் பேச்சு

சேலம் நகரத்தார் சங்க பொன்விழா கருத்தரங்கில் அறம் பேணுதலில் வளர்ச்சியும், நம்பிக்கையும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றிய மேலை.பழநியப்பன் தன்னுரையில்.,
அற உணர்வொடு, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டு, அறத்தை பேணி வளர்த்து பொன் விழா மூலம், நம்பிக்கையூட்டியுள்ள சேலம் நகரத்தார் சங்க ஐம்பது ஆண்டு கால நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்.
உலக அரங்கில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்திற்கு மட்டுமே, அறச்சமூகம் என்ற தனிச்சிறப்பு உண்டு, ஆங்கிலேயர்களாலேயே தனி நபர் பெருங்கொடைக்காக ராஜா சர் என்ற அறப்பட்டம், முத்தையா செட்டியார் அவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்டது. கல்விக்காகவும், விஞ்ஞான கழகத்திற்காகவும், கோடி கொடுத்து, குடியிருந்த வீடும் கொடுத்த வள்ளல் அழகப்பரின் அறம் இன்றும் பேசப்படுவதாக அமைந்துள்ளது. வான்புகழ் வள்ளுவம், அன்றறிவாம் என்னாது அறம் செய்க எனக்கட்டளையிடுகிறது. ஆனால் அவ்வை பிராட்டியோ, ஆத்திச்சூடியில் அறம் செய்ய விரும்பு என்கிறாள், நாம், நம் முன்னோர் செய்த அறங்களை பேணி வருகிறோம். ஆனால் சைவமும், தமிழும் என்பதில் நம்பிக்கை தளர்ந்து வருகிறது. சைவத்திற்கு இணையாக வைஷ்ணவத்திலும் தற்போது ஈடுபாடு கொண்டுள்ளோம். தமிழைப் பொறுத்தவரை வளரும் தலைமுறையாகிய குழந்தைகளுக்கு, பேச, எழுத தெரியவில்லை. அந்தக் குழந்தைகளுக்கு பெரும் பாலும், நாம் தமிழ் பெயரையும் சூட்டவில்லை, கடவுள் பெயரையும் வைக்க வில்லை, தாத்தா, பாட்டி, ஐயா போன்றவர்களின் பெயர்களையும் இடவில்லை. இதில் நம்முடைய தமிழ் நம்பிக்கை தளர்கிறது. இல்வாழ்க்கை தான் அறம் என்றும், அங்கிருந்து தான் அறம் தளைக்கிறது என்றும், வான் புகழ் வள்ளுவம் கூறுகிறது. ஆனால் நம் சமூகத்தில் அந்த அறம் தளர்கிற வகையில் ஏராளமான விவாகரத்துகள், கலப்பு மனங்கள், பெருகுகின்றன. நம்மில் மூத்தவர்கள், அறிஞர்கள் இதற்கு குரல் கொடுக்க கூட தயங்குகிறார்கள். இது எப்படி அறம் பேணுவதாக அமையும்.
குளம் அமைத்தல், பசு மடம், மடம், தண்ணீர் பந்தல், பசுவுக்கு வாயுறை, ஆதுலர் சாலை என முப்பத்து இரண்டு அறங்களை நம் முன்னோர்கள், செய்து வழிகாட்ட நாமும் பேணி வருகிறோம்,. அவற்றில் தலையாய அறங்களாகிய சைவம், தமிழ், கலப்பு மணம், விவகரத்து இவைகளில் இன்னும் அதிகமாக தனிக்கவனம் செலுத்தினாலே அறம் பேணுதலில் வளர்ச்சியும் நம்பிக்கையும், மிளிரும் என்றார்

No comments:

Post a Comment