Sunday 30 August 2015

ஜெயலலிதா வீட்டு முன்பு மது ஊற்ற வந்த சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் கைது





முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன்பு மது ஊற்றிப் போராட்டம் நடத்த புறப்பட்ட சட்டப் பஞ்சாயத்து இயக்கக்கத்தினரை போலீஸார் முன்கூட்டியே தடுத்து நிறுத்திக் கைது செய்தததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காந்தியவாதி சசிபெருமாள் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் மது விலக்கு கோரி பல்வேறு போராட்டங்கள் சூடு பிடித்து வருகின்றன. தமிழகம் முழுவதும் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், கம்யூனீஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்து வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவர்களும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு தற்போது ஓய்ந்து போயுள்ள நிலையில் மதுவுக்கு எதிராக ஆங்காங்கே செல் போன் நிறுவனங்கள் டவர்களில் ஏறி பலதரப்பட்ட மக்கள் போராடி வருகின்றனர். இதனால் தமிழகம் மதுவுக்கு எதிரான போராட்டக் களமாக மாறியிருக்கிறது.
தற்போது இந்தப் போராட்டங்கள் சற்று குறைந்துள்ளன. இந்த நிலையில் மது விலக்கை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா முன்வராததைக் கண்டித்து அவரது வீட்டின் முன்பு மதுவை ஊற்றிப் போராட்டம் நடத்தப் போவதாக சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் தோட்டப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி போராட்டம் நடத்தக் கிளம்பிய போராட்டக் குழுவினரை போலீஸார் முன்கூட்டியே தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர். அவர்கள் தெரிவிக்கையில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கடந்த 7 நாட்களாக, மதுவிலக்கை தமிழக முதல்வர்அறிவிக்க கோரிக்கை வைத்து , தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தோம், இன்று பிற்பகல் 1 மணி அளவில், மிடாஸ் சாராய ஆலையின் பங்குதாரரான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம்  முன்பு பிராந்தி ஊற்றி போராட்டம் நடத்த புறப்பட்டபொழுது கைது செய்யப்பட்டோம் என தெரிவித்துள்ளனர். மேலும் தகவல் அறியும் உரிமை மூலமும் பெறப்பட்ட தகவல்களையும் இணைத்து, மது குறித்து அவர்கள் எடுத்த சர்வே குறித்தும் செய்தியாளர்களுக்கு புள்ளி விவரமாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment