Thursday 27 August 2015

காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டம் - சென்னை ஐகோர்ட்டு கண்டனம்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மதுவிலக்கு அமல்படுத்த கோரிய போராட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பிரதமர் நரேந்திரமோடி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை குறிப்பிட்டும், அவர்கள் சந்திப்பு குறித்தும்  சில அவதூறு கருத்தை தெரிவித்தார்.
இதையடுத்து தமிழகத்தில் இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க. வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், காமராஜர் அரங்கத்தின் அலுவலக உதவியாளர் வளர்மதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், காமராஜர் அரங்கம் மேலாளர் நாராயணன் ஆகியோர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து இருவரும் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிபதி பிறப்பித்துள்ள நிபந்தனையின்படி, இளங்கோவனும், நாராயணனும் 15 நாட்கள் மதுரையில் தங்கியிருந்து கையெழுத்திடவேண்டும். இதையடுத்து இளங்கோவன் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஜாமீன் உத்தரவாதம் அளித்தார். நேற்று இரவு மதுரைக்கு இளங்கோவன் புறப்பட்டு சென்று, அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளார். இந்த தகவல் தெரிந்துக்கொண்ட அ.தி.மு.க.வினர், அந்த ஓட்டலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார். அப்போது, இளங்கோவன் தரப்பு மூத்த வக்கீல் வி.பிரகாஷ் ஆஜராகி, ‘இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த நிபந்தனையை பூர்த்தி செய்ய இளங்கோவன் மதுரைக்கு சென்றுள்ளார். ஆனால், அவர் தங்கியுள்ள ஓட்டல் முன்பு அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஐகோர்ட்டு விதித்த நிபந்தனையின்படி, தல்லாகுளம் போலீசில் கையெழுத்திட முடியாத சூழ்நிலையில் இளங்கோவன் உள்ளார்’ என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதி வைத்தியநாதன், அ.தி.மு.க.வினர் நடத்தும் போராட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஐகோர்ட்டு உத்தரவின்படிதான் மதுரையில் இளங்கோவன் தங்கியிருந்து கையெழுத்திடுகிறார் என்று போராட்டம் நடத்தும் அ.தி.மு.க.வினருக்கு தெரியாதா? ஐகோர்ட்டு விதித்த நிபந்தனையின்படி மதுரையில் தங்கியுள்ள இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் நடத்துவது கண்டனத்துக்குரியது. தனிநபர் சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.
எனவே, அரசு வக்கீலும், மனுதாரர் வக்கீலும் மதுரையில் என்ன நடக்கிறது? என்ற விவரங்களை கேட்டு எனக்கு தெரியப்படுத்தவேண்டும்‘ என்று உத்தரவிட்டார்.
அப்போது மனுதாரர் வக்கீல், ‘இளங்கோவனுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளர்த்த கோரி மனு தாக்கல் செய்ய உள்ளேன். அந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்‘ என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அதுகுறித்து மனு தாக்கல் செய்யுங்கள், அந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்‘ என்று கூறினார்.
இந்த சம்பவம் மதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment