Friday 28 August 2015

ஜெ.வை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி மீது சொத்து குவிப்பு புகார்!


இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்த விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி மீது சொத்து குவிப்பு புகார் எழுந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ100 கோடி அபராதம் விதித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை விடுதலை செய்தார். 
ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா அரசு, தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா பிரஷ்ட்டா நீர் மூலனா வேதிகே என்ற கன்னட அமைப்பு, நீதிபதி குமாரசாமி மீது சொத்து குவிப்பு புகாரை தெரிவித்துள்ளது. அதில் நீதிபதி குமராசாமி தாமாக முன்வந்து சொத்து விவரங்களை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வெளியிட்டிருக்கிறார்; ஆனால் இதில் பல விவரங்களை மறைத்திருக்கிறார். அவர் வாங்கு குவித்த நிறைய அசையா சொத்துகள் பற்றி அவர் தெரிவிக்கவில்லை. மேலும் பெங்களூரு மற்றும் மைசூருவில் நீதிபதி குமாரசாமி வாங்கி குவித்த சொத்துகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. இந்த மனு ஜனாதிபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment