Sunday 30 August 2015

தமிழக மீனவர்களை தாக்க சிங்கள கடற்படைக்கு போர்கப்பல் வழங்குவதா?: மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி. வராஹா என்ற போர்க்கப்பலை சிங்களக் கடற்படைக்கு இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது. தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் இலங்கைக்கு இந்தியா கப்பலைக் கொடையாக அளித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
வராஹா போர்க்கப்பலை இலங்கைக்கு தாரை வார்ப்பதில் வெளிப்படையான அணுகுமுறை கடைபிடிக்கப்படவில்லை. இந்த விஷயம் தமிழக அரசியல் கட்சிகளுக்குத் தெரிந்தால் கடும் எதிர்ப்பு எழும் என்பதால், அந்த கப்பலை இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு ரகசியமாக கொண்டு சென்று ஒப்படைத்து விட்டு திரும்பியுள்ளனர். இப்போது கூட இந்த செய்தியை இலங்கை பாதுகாப்புத்துறை தான் வெளியிட்டிருக்கிறதே தவிர, இந்திய பாதுகாப்புத்துறை வாய் பேசாமல் தான் இருந்து வருகிறது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒருபோதும் துணையாக இருக்கப் போவதில்லை. ஏற்கனவே ஈழத் தமிழர்களை படுகொலை செய்வதற்காக இந்த கப்பலை பயன்படுத்திய இலங்கை, இப்போது வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்வது, தாக்குவது, சுட்டுக் கொல்வது போன்ற மனித உரிமை மீறல்களை அரங்கேற்றுவதற்கு தான் பயன்படுத்தப் போகிறது.
உலகில் சொந்த நாட்டு மீனவர்களை தாக்க அடுத்த நாட்டு கடற்படைக்கு ஆயுதங்களை வழங்கிய அவப்பெயர் தான் இந்தியாவுக்கு ஏற்படப் போகிறது. இந்த பழியை தடுக்க வேண்டுமானால், இதுவரை இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட 3 போர்க்கப்பல்கலையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment