தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போராட்டம், ஆர்பாட்டம், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இளங்கோவனை கைது செய்யக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் தீக்குளிப்பு மிரட்டல் வந்துள்ள சம்பவம் சென்னை வானகரம் அருகே பரபரப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை வானகரம் அருகே உள்ள சேக் மானியம் கபாலி தெருவை சேர்ந்தவர் குமார் (48). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார்.
இன்று அதிகாலை 4.30. மணி அளவில் போரூர் ஆற்காடு சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு குமார் சென்றார். அங்கு பணியில் இருந்த காவலாளியின் கண்ணை மறைத்து விட்டு அலுவலகத்துக்குள் புகுந்த குமார் படிக்கட்டு வழியாக ஏறி மொட்டை மாடிக்கு சென்றார்.
கட்டிடத்தின் மேல் மாடியில் அமைக்கப்பட்டிருந்த 150 அடி உயர செல்போன் டவரில் அ.தி.மு.க. கொடியுடன் அவர் வேகமாக ஏறினார். பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டியையும் அவர் உடன் எடுத்துக் சென்றிருந்தார்.
இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மதுரவாயல் மற்றும் வளசரவாக்கம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த துணை கமிஷனர் மகேஸ் குமார், வில்லிவாக்கம் உதவி கமிஷனர் முருகேசன் மற்றும் கோயம்பேடு உதவி கமிஷனர் மோகன்ராஜ் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
தீயணைப்பு அதிகாரிகள் தலைமையில் வீரர்களும் விரைந்தனர். மீட்பு குழுவினர் கீழே நின்றபடியே குமாரிடம் சமாதான பேச்சு நடத்தினர். அப்போது, அவர் பிரதமர் மோடி, முதல்–அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினார்.
குமாரின் மனைவி சித்ரா, மகன்கள் கார்த்திக், விக்னேஷ் ஆகியோரும் அங்கு வந்து கீழே இறங்கி வருமாறு கூறினர். இந்த நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் 2 பேர் குமாரை மீட்பதற்காக செல்போன் டவரில் ஏறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த குமார், அவர்கள் மீது பெட்ரோலை ஊற்றினார். குமாரின் கையில் தீப்பெட்டியும் இருந்ததால் பயந்து போன தீயணைப்பு வீரர்கள் அவசரம் அவசரமாக கீழே இறங்கிவிட்டனர்.
அப்போது குமார் யாராவது மேலே ஏறி வந்தால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் கீழே நின்றபடியே மீட்பு குழுவினர் அவரிடம் பேசிக் கொண்டே இருந்தனர்.
உங்களது கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து மனம் மாறிய குமார் காலை 7.30 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டு விட்டு கீழே இறங்கி வந்தார்.
பின்னர் போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். குமாரின் இந்த போராட்டம் காரணமாக போரூரில் இன்று காலை 3 மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு போராட்டத்தை வேடிக்கை பார்க்க பொது மக்களும் திரண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment