Monday 24 August 2015

ஓய்வு பெற்றார் ஜெ - நீதிபதி குமாரசாமி: வெறும் அரை மணி நேரத்தில் முடிந்தது பிரிவு உபச்சார விழா

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர். குமாரசாமி இன்று வரை தமிழகத்தை பொறுத்த வரை அவர் ஜெ நீதிபதி என்று தான் அழைக்கப்பட்டு வருகிறார். அவர் இன்று (திங்கள்கிழமை) ஓய்வு பெற்றார்.
இதனையொட்டி பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் உள்ள 1-ம் எண் அரங்கில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. விழாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுப்ரோ கமல் முகர்ஜி தலைமை வகித்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
நீதிபதி சி.ஆர். குமாரசாமியின் பிரிவு உபச்சார விழா அரை மணி நேரத்திலேயே முடிவுற்றது. மதியம் 2 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் தலைமை நீதிபதி உரையாற்றினார்.
பின்னர் பேசிய நீதிபதி குமாரசாமி, "தன்னுடன் பணியாற்றிய சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், உதவியாளர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றுமட்டும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த குமாரசாமி, அரசு சட்டக்கல்லூரியில் பயின்றார். 1983-ல் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட இவர், பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் மற்றும் மாநகர‌ அமர்வு நீதிமன்றத்தில் தொழிலாளர் பிரிவு, சிவில், கிரிமினல் வழக்குகளில் வழ‌க்கறிஞராக பணியாற்றினார்.
கடந்த 1995-ம் ஆண்டு நடை பெற்ற மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் முதன்மை நீதிபதியாக பணியாற்றினார்.
2005-ல் கர்நாடக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2007-ல் கர்நாடக உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் பொறுப்பு சி.ஆர்.குமாரசாமியிடம் கடந்த ஜனவரி 1-ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. அரசு விடுமுறைகளை தவிர்த்து, தொடர்ச்சியாக 41 நாட்களில் விசாரணையை முடித்தார்.
கடந்த மே 11-ல் 919 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்ததற்கான உரிய காரணம் இல்லாமை, கணித பிழைகள் என குமாரசாமியின் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த 3 மாதங்களாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கமான பணிகளை கவனித்து வந்த நீதிபதி குமாரசாமி, திங்கள்கிழமை பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

No comments:

Post a Comment