Friday, 28 August 2015

காந்தியவாதி சசி பெருமாள் மரணத்தில் மர்மம்… உயர்நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவேன்: வைகோ

கன்னியாகுமரி: சசிபெருமாள் மரணத்தில் மர்மம் உள்ளது. அவர் சாகடிக்கப்பட்டுள்ளார். வரும் 31ம் தேதி மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி பகிரங்கமாக உண்மைகளை வெளியிடுவேன் என்று வைகோ கூறியுள்ளார். மார்த்தாண்டம் உண்ணாமலைக்கடையில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்றகோரி கடந்த 31ம் தேதி 150 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது சசிபெருமாள் உயிரிழந்தார். சசிபெருமாள் மரணம் குறித்து கள ஆய்வு செய்வதற்காக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை குமரி மாவட்டம், உண்ணாமலைக்கடைக்கு வந்தார். அங்கு சசிபெருமாள் மரணமடைய காரணமாக இருந்த டாஸ்மாக் கடை, சசிபெருமாளின் நண்பர் சிற்பி சசீதரன் வீடு, அருகில் உள்ள கிறிஸ்தவ ஆலயம், பள்ளிக்கூடம் போன்றவற்றை பார்வையிட்டார். 
டவர் அமைந்துள்ள இடம், போராட்டம் நடந்த இடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கும் சென்று விசாரித்தார். இதையடுத்து பேரூராட்சி தலைவர் ஜெயசீலன் மற்றும் அங்கிருந்த பொதுமக்களிடம் சசிபெருமாள் மரணத்தின்போது நடந்தவைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி 1000 நாளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் போராட்டக் குழு அமைத்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறார்கள். சசிபெருமாளும் ஏற்கெனவே ஒரு முறை நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அதேபோல், சம்பவம் நடந்த அன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சசிபெருமாள், அங்கிருந்து, உண்ணாமலைக்கடைக்கு வந்திருக்கிறார். பின்பு போராட்ட குழுவினரோடு கலந்துகொண்டு டவரில் ஏறி போராட்டம் நடத்தி இருக்கிறார். சசிபெருமாள் டவரில் ஏறியபோது அங்கு பணியில் இருந்த போலீசாரும், அதிகாரிகளும் அவரை ஏளனம் செய்து சிரித்துள்ளனர். இந்த அரசாங்கத்தால் சசிபெருமாள் சாகடிக்கப்பட்டுள்ளார். அப்போது அப்பாவி மக்களையும், காவல்துறை உதவி சூப்பிரெண்ட் விக்ரம் பட்டீல் அடித்து விரட்டியுள்ளார். பின்னர் குழித்துறை மருத்துவமனையிலும் தடியடி நடத்தியுள்ளார். அவருக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். இது வட இந்தியா இல்லை, தமிழ்நாடு. மக்களின் மனவோட்டத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். சசிபெருமாள் மரணம் அடைந்த செய்தி அறிந்த நான் உடனடியாக வந்து ஆசாரிபள்ளத்தில் சசிபெருமாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன். அதை தொடர்ந்து அவரது அடக்கம் வரை எனது பணி தொடர்ந்தது. இப்போது அவரது மகன் விவேக் தொடர்ந்துள்ள வழக்கிலும் 31ம் தேதி நான் தான் ஆஜராகி வாதாடுகிறேன் அப்போது பகிரங்கமாக உண்மைகளை வெளியிடுவேன். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் தான் சசிபெருமாள் ஆத்மா சாந்தியடையும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

No comments:

Post a Comment