Monday 24 August 2015

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவை பாராட்டியதற்கு தி.மு.க ஸ்டாலின் எதிர்ப்பு - பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு

இன்றைய சட்டசபை நிகழ்ச்சி முடிந்ததும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சட்ட சபைக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது:–
நீண்ட இடைவெளிக்கு பிறகு பல்வேறு கட்சி தலைவர்களும் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று எதிர்பார்த்த நேரத்தில் இன்று சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பம் ஆகி உள்ளது.
இந்த கூட்டத்தொடர் குறித்து ஏற்கனவே கடந்த 21–ந்தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்து உள்ளது.
அதன்படி இன்று முதல் நாளில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பும், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இசை அமைப்பாளர் எம்.எஸ்.விசுவநாதன், முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானமும் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான நிகழ்ச்சி நிரல் முன்கூட்டியே உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இன்று சபை கூடியதும் இந்த மரபுப்படி நடக்காமல் முதல்–அமைச்சரை பாராட்டும் வகையில் சபாநாயகர் புகழ்ந்து பேசுகிறார். நாதஸ்வர இசையும், முழங்கி இருக்கிறார்கள்.
இரங்கல் தெரிவித்து நடைபெறுகின்ற இன்றைய நிகழ்ச்சியில் மங்கள இசை கேட்டது வேதனை அளிக்கிறது.
அவை கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசித்து இருக்க வேண்டும். ஆனால் முதல் – அமைச்சரை பாராட்டும் விதமாக அவர் சந்தித்த வழக்குகளில் இருந்து விடுதலையாகி அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில் நிரந்தரமாக அவருக்கு விடுதலை கிடைத்தது போல் சபாநாயகர் புகழாரம் படிக்கிறார்.
அவர் பேச, பேச 50 முறை அமைச்சர்களும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும் மேஜையை தட்டி வரவேற்கிறார்கள்.
சபாநாயகர் பேசிய பிறகு, முதல் – அமைச்சர் ஜெயலலிதா பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இருகரம் கூப்பி வணங்குகிறார். எங்களை பொறுத்தவரை இந்த புகழ்பாடும் நிகழ்ச்சிகளை நாளைக்கு வைத்து இருக்கலாமே.
அப்துல் கலாம் மறைவுக்காக இரங்கல் தெரிவிக்கும் நாளில் இப்படி செய்வது நியாயமா? அவரது மறைவுக்காக அனைத்து கட்சியினரையும் சட்ட சபையில் பேச அனுமதிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மரபுக்கு மாறாக முதல்– அமைச்சருக்கு புகழ்பாடும் சபையாக இன்றைய சபையை சபாநாயகர் தொடங்கி வைத்து உள்ளார். இந்த சபை இனி இப்படித்தான் நடக்கும்போல் தெரிகிறது.
வருகிற கூட்டத்தொடரில் மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து சபாநாயகரிடம் தனிநபர் தீர்மானம் எழுதி கொடுத்து இருக்கிறோம். நாளையே விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜயதாரணி (காங்.):– காங்கிரஸ் கட்சி சார்பிலும் மதுவிலக்கு தொடர்பாக 6–வது பிரிவின் கீழ் தனிநபர் மசோதா கொடுத்து உள்ளேன். நாளைய மற்ற அலுவல்களை ஒத்தி வைத்து மதுவிலக்கு சம்பந்தமாக விவாதம் செய்ய கேட்டு உள்ளேன். ஆளும் அ.தி.மு.க.வினர் பல்வேறு அவதூறு பிரசாரங்களில் ஈடுபட்டு உள்ளனர். அது குறித்தும் சட்டசபையில் குரல் எழுப்ப உள்ளோம்.
வெங்காய விலை உயர்வு மின்கட்டணம், பால்விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் சட்டசபையில் பேசுவோம்.
ஆறுமுகம் (இந்திய கம்யூ.):– மதுவிலக்கு பிரச்சனை, மக்களின் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்து உள்ளதால் இந்த தொடரில் இதை தனித்தீர்மானமாக கொண்டு வர வலியுறுத்தி உள்ளோம்.
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்):– அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு தராதது வருத்தம் அளிக்கிறது.
ஜவாஹிருல்லா (மனித நோய மக்கள் கட்சி):– உலக அளவில் புகழ்பெற்ற அப்துல்கலாம் மறைவுக்கு சட்டசபையில் ஒவ்வொரு உறுப்பினரும் இரங்கல் தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் யாரையும் பேச சபாநாயகர் அழைக்காதது வருத்தம் அளிக்கிறது.


No comments:

Post a Comment