ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 7–ந்தேதி இரவு திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள சீக்கடிதலகோணா, சச்சிநோடிபண்டா ஆகிய பகுதியில், தமிழகத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் 20 பேரை, ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்த பிரச்சினையை அடுத்த தமிழகத்தில் ம.தி.மு.க, பா.ம.க, தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டோர் பல்வேறு போராட்டங்களை நடத்தி நீதி கேட்டு இன்னும் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட பகுதியில் செம்மர கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சீக்கடிதலகோணா வனப்பகுதியில் 13 கூலித்தொழிலாளிகள் செம்மரங்களை வெட்டி தலையில் சுமந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும், கும்பல் தப்பி ஓடி விட்டது. கும்பல் விட்டுச் சென்ற 13 செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், சக்கிநோடிபண்டா வனப்பகுதியில் 12 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தது. அந்தக் கும்பல், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடியது. போலீசார் விரட்டிச் சென்று 2 பேரை பிடித்தனர். 10 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்ட 2 பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மணி (வயது 45), வேலூரை சேர்ந்த மஞ்சு (46) என்று தெரிய வந்தது. 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மேற்கண்ட 2 இடங்களில் இருந்து மொத்தம் ரூ.60 லட்சம் மதிப்புள்ள செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment