Friday, 28 August 2015

”இலங்கை இனப்படுகொலையில் அமெரிக்காவுக்கும் பங்குண்டு” - தொல்.திருமாவளவன் அறிக்கை


இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக் குற்றத்தில் அமெரிக்காவுக்கும் பங்குண்டு என்பதை புறந்தள்ளிவிட முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராஜபக்சே தலைமையிலான சிங்கள இனவெறிக் கும்பல், அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தில் மிகவும் கொடூரமான இனப்படுகொலை குற்றத்தைச் செய்திருந்தாலும், அவர்கள்மீது சர்வதேச அளவில் போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கேனும் பெரும்பாலான சர்வதேச நாடுகளின் ஒப்புதலோடு ஐநா மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நமக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.
 
இத்தீர்மானத்தை அன்று அமெரிக்க வல்லரசே முன்மொழிந்தது. அதனால், அமெரிக்க ஆதரவு நாடுகள் யாவும் அத்தீர்மானத்திற்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்தன. இலங்கையில் தற்போது ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இராஜபக்சே, அதிபர் மற்றும் பிரதமர் தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்துள்ளார். மைத்ரிபாலா சிறீசேனா அதிபராகவும் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகவும் வெற்றிப் பெற்றுள்ளனர்.
 
இத்தகைய சூழலில், அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இராஜபக்சே கும்பலின் மீதான சர்வதேச புலனாய்வு விசாரணை தேவையில்லை எனவும் உள்ளூர் அளவிலான விசாரணையே போதுமானது எனவும் இது தொடர்பாக ஐநா மனிதவுரிமை ஆணையத்தில், வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப் போவதாகவும் அண்மையில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றி அறிவித்துள்ளது.
 
அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்காவின் தெற்காசிய வெளியுறவு துணை செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாஸ் இவ்வாறு கூறியிருக்கிறார். இலங்கை அதிபராக வெற்றிப் பெற்றதும் சிறீசேனா, சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இராஜபக்சே மீது உள்ளூர் விசாரணையே நடத்துவோமென அறிவித்தார். இவருக்கு ஆதரவாக இன்று அமெரிக்காவும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.
 
இது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அமெரிக்க வல்லரசின் ஆதரவாளர்களான ரணிலும் சிறீசேனாவும் இன்று இலங்கையில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் அதேவேளையில், சீனாவின் ஆதரவாளரான ராஜபக்சே படுதோல்வி அடைந்திருப்பதால் அமெரிக்காவின் எண்ணம் ஈடேறிவிட்டதாக அது கருதுகிறது.
 
எனவே, ராஜபக்சே மீதான சர்வதேச விசாரணை தேவையில்லை எனவும் தனது ஆதரவாளரான சிறீசேனாவின் விருப்பத்திற்கு மாறாக செயல்படக் கூடாது எனவும் கருதுகிறது. இது பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு எதிராக அமெரிக்கா செய்யும் மாபெரும் துரோகமாகும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மேலாதிக்கப் போட்டியில் ஈழத்தமிழர்கள் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
 
தொடக்க காலத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போட்டியும் இன்று அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டியும் மறைமுகமான முறையில் நீண்டகால பனிப்போராக நடைபெற்று வருவது உலகறிந்த உண்மையாகும். தெற்காசிய பகுதியில் யாருடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுவது என்னும் ஏகாதிபத்திய போட்டிக் களத்தில்தான் ஈழத்தமிழர்கள் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படும் நிலை தொடர்கிறது.
 
இரட்டைக் கோபுரங்களை இடித்த பின்னர் அமெரிக்கா எடுத்த நிலைப்பாடுகள்தான் ஈழவிடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் பாதிப்பை உருவாக்கின என்பதும் எவராலும் மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும். அமெரிக்காவும் இந்தியா உள்ளிட்ட அதன் அடிவருடி நாடுகளும் ஒருங்கிணைந்து சிங்கள இனவெறிக் கும்பலுக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக களமிறங்கின.
 
பயங்கரவாத ஒழிப்பு என்னும் பெயரில் புலிகளை ஒழிப்பதாகக் கூறி அப்பாவித் தமிழர்களை இலட்சக் கணக்கில் கொன்று குவித்த இனப்படுகொலைக்குத் துணை போயினர். அதாவது, இனப்படுகொலைக் குற்றத்தில் அமெரிக்காவுக்கும் பங்குண்டு என்பதை புறந்தள்ளிவிட முடியாது.
 
அத்தகைய அமெரிக்க வல்லரசிடம் நாம் நீதியை எப்படி எதிர்பார்க்க இயலும்? ஒருவேளை நடந்து முடிந்த தேர்தலில் ரணில் தோற்று ராஜபக்சே வெற்றி பெற்றிருந்தால் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்காது.
 
ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் நலன்களிலிருந்துதான் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளைக் கையாளுகின்றனர் என்பதைப் புரிந்து கொண்டு உலகத் தமிழர்கள் செயல்பட வேண்டும். தங்களுக்கிடையிலான வேறுபாடுகளையும் கசப்புணரவுகளையும் புறந்தள்ளிவிட்டு நெருக்கடியான இந்தச் சூழலில் உலகத் தமிழர்கள் யாவரும் ஒன்றுபட்டு போராட முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
ஈழத்தில் தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தொலைநோக்குப் பார்வையோடு மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்படவேண்டுமெனவும் ரணில், சிறீசேனா கும்பலின் சதிவலைக்குள் சிக்கிக்கொள்ளாமல் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு செயல்படவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
 
அமெரிக்க வல்லரசின் துரோகத்தைக் கண்டிக்கும் வகையிலும் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச புலனாய்வு விசாரணையைக் கைவிடக் கூடாது என வற்புறுத்துகிற வகையிலும் வரும் ஆகஸ்டு 30 சர்வதேச காணாமல் போனவர்களின் தினம் என்பதையொட்டி, ஈழத்தில் காணமல் போன சுமார் முப்பதாயிரம் தமிழர்கள் தொடர்பாக சர்வதேச புலனாய்வை நடத்திட ஐநா பேரவை முன்வரவேண்டுமென கோருகிற வகையிலும் வரும் செப்டம்பர் 3 அன்று அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் விடுதலைச் சிறுத்தைகளின் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப் அறிவிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment