Wednesday 26 August 2015

இந்து கோயிலை மீண்டும் கட்ட பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தானில் இந்து கோயிலை மறுகட்டுமானம் செய்யும்படி மாவட்ட நிர்வாகத்துக்கும், உள்துறைக்கும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் கட்டுமானப் பணிக்காக பிரசித்தி பெற்ற கட்டடக் கலை நிபுணரைப் பணியமர்த்தும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
கரக் மாவட்டம் தேரி கிராமத்தில், பரமஹம்ஸ ஜி மஹாராஜ் என்ற இந்து சாது வாழ்ந்து வந்தார். அவர் 1919-ம் ஆண்டு மறைந்தார். அவர் சமாதியடைந்த இடத்தில், கோயில் எழுப்பப்பட்டது. அந்தக் கோயில் 1997-ல் சில விஷமிகளால் இடிக்கப்பட்டது. கோயில் இருந்த இடத்தை அப்பகுதி மவுல்வி இப்திகாருதீன் என்பவர் ஆக்கிரமித்து உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோயிலை மீண்டும் கட்டும்படி ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்நிலையில், தலைமை நீதிபதி ஜவ்வாத் எஸ். கவாஜா தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி, “தார்பர்கர் எம்.பி. ரமேஷ் குமார் வாங்க்வானி, கைபர் பக்துன்க்வா உள்துறை செயலாளர் அர்பாப் முகமது, கரக் துணை ஆணையர் ஷோயப் ஜட்டூன் ஆகியோர் இணைந்து,  பரமஹம்ஸ ஜி மஹாராஜ் சமாதியை மறு கட்டுமானம் செய்வதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
இந்த உத்தரவுக்கு மறுப்பு தெரிவிக்கவே கூடாது. எக்காரணம் கொண்டும் உத்தரவை நிறைவேற்றியாக வேண்டும். கரக் துணை ஆணையர், கோயில் இருந்த இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். மாகாண நிர்வாகம் புதிய கோயிலைக் கட்டுவதற்குப் பதில் வெறும் சுற்றுச்சுவரை கட்டியிருப்பது திருப்திகரமான நடவடிக்கை அல்ல.
சுற்றுச்சுவர் என்பது அப் பகுதியை மோசமாக்கி விடும். லாகூரில் உள்ள ஷாஹால்மி சந்தையில் இருந்த இந்துக் கோயிலை கட்டிடக் கலை நிபுணர் கமீல் கான் மறு கட்டு மானம் செய்வித்தார். அவருக்கு புராதன கட்டிடக்கலை பற்றிய நன்கு புரிதல் உள்ளது. கோயிலை மறுகட்டுமானம் செய்ய இலவச ஆலோசனை வழங்கினார். எனவே, கரக் மாவட்டத்தில் உள்ள கோயிலைப் பாதுகாக்கவும் அவர் உதவ வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
அடுத்தகட்ட விசாரணை வரும் செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் டான் இதழின் இணைய பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது.



No comments:

Post a Comment