இலங்கை இனப்படுகொலை குறித்த அமெரிக்காவின் முடிவு, வரலாற்று நிகழ்வுகளைத் திரித்திடும் முயற்சி என்று கூறி திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- அதிமுக அரசினால் முடக்கப்பட்டுள்ள மதுரவாயல் பறக்கும் சாலைத்திட்டம் பற்றி மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்திருக்கிறாரே?.
பதில்:- "மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தைப் பொறுத்தவரை, நீதிமன்றத்திற்கு வெளியே பேசித்தீர்க்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தேவைப்பட்டால் ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதையில் சிறிய மாற்றம் அல்லது புதிய பாதை அமைக்கக்கூட நாங்கள் தயாராக உள்ளோம்.
இத்திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், மிகவும் பழமை வாய்ந்த சென்னை துறைமுகம் வருங்காலத்தில் காட்சிப் பொருளாக மாற வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்" என்று திட்டம் செயலாக்கம் பெற வேண்டும் என்ற முக்கியத்துவத்தை உணர்ந்து கூறியிருக்கிறார்.
மேலும் அவரது பேட்டியில், "குளச்சல் துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு உலகளாவிய கப்பல்கள், வந்து செல்லும் வசதி உள்ளது. அத்துறைமுகத்தைக் கட்டமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். குளச்சல் துறைமுகத்தை மத்திய அரசே எடுத்து நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்கினால், இந்தியாவிலேயே முதன்மைத் துறைமுகமாக மாற்றப்படும். இதன் மூலம் தென் மாவட்டங்கள் அதிகம் பயன்பெறும். எனவே இந்த விஷயத்தில் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஆனால் மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு தமிழக அரசு அல்லவா இறங்கிவர வேண்டும்.
கேள்வி:- இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் குறித்து, விசாரணை நடத்தும் பொறுப்பினை, அந்தப் படுகொலைகளுக்குக் காரணமான இலங்கை அரசிடமே ஒப்படைக்கப்போவதாக அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறதே?
பதில்:- இது குறித்து, ஐக்கிய நாடுகளின் மன்றம் அமைத்த மூவர் குழுவினர் நடத்திய விசாரணையின் மூலம் இலங்கையிலே தமிழ் இனப்படுகொலை நடந்தது உண்மை என்பது வெளிப்பட்டது. 2014 ஆம் ஆண்டு மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க அரசு கொண்டு வந்த தீர்மானம், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க சுதந்திரமான, நம்பகமான சர்வதேச விசாரணைக் குழு அமைக்கக் கோரியது.
தற்போது அமெரிக்க அரசின் முடிவு, நடந்து முடிந்த தமிழ் இனப் படுகொலையை முழுமையாக மூடி மறைத்து, போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசிடமே ஒப்படைக்க முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. அண்மையில் இலங்கைக்கு வந்துள்ள தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் இதனை வெளிப்படுத்தியிருக்கிறார் என்ற செய்தி வந்துள்ளது.
இந்தச் செய்தி உண்மையாகிவிடக் கூடாதென்றே நான் விரும்புகிறேன்; மாறாக, உண்மையாக இருக்குமானால், வரலாற்று நிகழ்வுகளைத் திரித்திடும் அமெரிக்க அரசின் இந்த முயற்சியை திமுக வின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கேள்வி:- சொத்துக்குவிப்பு வழக்கில் கூட்டல் கணக்கிலே மிகப்பெரிய தவறைச் செய்து, அதையே அடிப்படையாக வைத்து ஜெயலலிதாவை உயர் நீதிமன்றத்தில் விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி ஓய்வு பெற்று விட்டதாகச் செய்திகள் வந்திருக்கிறதே?
பதில்:- நீதிபதி குமாரசாமியைப் பற்றி, லைவ் லா.இன் என்ற இணையதளத்தில், "ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற தலைப்பில் 26-8-2015 அன்று ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தக் கட்டுரையைப் படித்த துரைராஜ் ஆனந்தராஜ் என்பவர், "நீதிபதி குமாரசாமிக்கு அமெரிக்காவில் சொத்து இருப்பதாக வதந்திகள் மூலம் தெரிய வருகிறது. மேலும் பிரதமர் மோடியின் நண்பரான கவுதம் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னணியாக இருந்திருக்கிறார்" என்று கருத்து தெரிவித்துள்ளார். நீதிபதி குமாரசாமியை பற்றி இணையதளம் கூறியிருக்கும் கருத்து இதுதான். இவ்வாறு கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment