தமிழ்நாட்டின் விலைமதிப்பில்லாத இயற்கையின் பொக்கிஷங்களில் ஒன்றுதான் மலை சார்ந்த கொடைக்கானல் நகரமாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களை மகிழ்வித்த இடங்கள் உதகையும், கொடைக்கானலும் தான். ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் பச்சைக் கம்பளமாய் விரிந்துள்ள அழகிய மரங்களும், மலர்த் தோட்டங்களும், எழில்மிகு ஏரியும் சுற்றுலாத் தலமாக மக்களைக் கவர்கின்றன. ஆனால் 1984இல் அமைக்கப்பட்ட இந்துஸ்தான் யூனி லீவர் தெர்மா மீட்டர் தொழிற்சாலையால் சுற்றுச்சூழலையும் பாழாக்கி நிலத்தையும் நீரையும் நச்சுமயமாக்கும் ஆபத்து ஏற்பட்டது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
இந்தத் தொழிற்சாலையின் பாதரசக் கழிவுகளால் கொடைக்கானலின் நீராதாரமான பாம்பார் சோலை வழி வரும் தண்ணீரும், காட்டோடைகளில் வரும் தண்ணீரும் நச்சுமயமாகி பொது மக்களும், கால்நடைகளும் கொடிய நோய்களுக்கு ஆளாகும் அபாயம் இருக்கிறது. இப்பாதரச நஞ்சால் உடலில் கொடிய தோல் நோய்கள் ஏற்படுவதோடு, பல குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கக் கூடிய பேரபாயமும் ஏற்படும்.
1950-களில் ஜப்பானில் பாதரசக் கழிவுகள் “மினமாட்டா” கடலில் கலந்ததால் அந்தக் கடற்கரையோரம் வாழ்ந்த மக்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி மடிந்தார்கள். அமெரிக்காவின் நியூயார்க் - வாட்டர் டவுன் என்ற இடத்தில் இருந்த பாதரச தெர்மா மீட்டர் தொழிற்சாலை மிகவும் பழமையானதால் அதைப் பிரித்தெடுத்துக் கொண்டு வந்து கொடைக்கானலில் அமைத்தார்கள்.
இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பாதரச தெர்மா மீட்டர்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால், உடைந்த தெர்மா மீட்டர்களும், நச்சுக் கழிவுகளும் இங்கேயே போடப்பட்டன. 50 டன் எடையுள்ள பாதரச மாசுள்ள குப்பைகள் பழைய பொருள்கள் வாங்கும் வியாபாரிகளுக்கு விற்கப்பட்டன.
இந்தியாவில் பாதரச மாசைச் சுத்தப்படுத்தும் வசதிகள் இல்லாத காரணத்தால், 2003-இல் 290 டன் பாதரசக் கழிவுகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
பாதரசத்தின் அபாயகரமான தன்மை பற்றி அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், கொடைக்கானல் வாசிகளுக்கும் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
தொழிலாளர்கள் எந்தக் கவனமும் இன்றி பாதரசத்தைக் கையாண்டனர். ஆலையின் பின்னுள்ள சோலைக் காட்டில் பாதரசம் கொண்ட கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டன. தமிழகத்தின் பல பகுதிகளில் பழைய பொருள் கடையில் பாதரசம் கொண்ட உடைந்த தெர்மா மீட்டர்கள் பல ஆண்டுகளாக அப்படியே கிடந்தன.
தெர்மா மீட்டர் ஆலையில் கடந்த சில ஆண்டுகளில் வேலை செய்த தொழிலாளர்கள் 17 பேரும், மூஞ்சிக்கல் பழைய பொருள் கடையில் பணியாற்றிய இரண்டு பேரும் சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடல் பிரச்சினைகளால் இறந்து போயினர். இன்னும் பலர் மிகவும் நோயுற்றவர்களாக இருக்கிறார்கள். வேலை செய்து பிழைப்பை நடத்துவது அவர்களுக்குச் சாத்தியமற்றதாக இருக்கிறது.
இந்த நிலையில் ஆலை மிகவும் கவனக் குறைவான வகையில் பாதரசக் கழிவைக் கையாளுகிறது என்று உள்ளூர் மக்களும் ஆலையின் முன்னாள் பணியாளர்களும் அம்பலப்படுத்திய பின்னர் 2001-இல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெர்மா மீட்டர் தொழிற்சாலையை மூடியது. அதன் பிறகு மூஞ்சிக்கல்லில் உள்ள காயலான் கடையிலும், ஆலையின் பின்னுள்ள சோலை காட்டிலும் பாதரசம் அடங்கிய 7 டன் குப்பையைக் கொட்டி வைத்திருந்தது பிடிபட்டது. ஆலையின் உள்ளே பாதரசத்தின் அளவு ஒரு கிலோ கிராம் மண்ணுக்கு இங்கிலாந்து நாட்டில் ஒரு மில்லி கிராம் பாதரசம் அனுமதிக்கப்படும். நெதர்லாந்து நாட்டில் ஒரு கிலோ கிராம் மண்ணுக்கு 10 மில்லி கிராம் பாதரசம் அனுமதிக்கப்படும். ஆனால், கொடைக்கானலிலோ 100 மில்லி கிராம் பாதரசம் இடம் பெற்றுள்ளது. உலகின் எந்தப் பகுதியிலும் இந்த ஆபத்து இல்லை.
இந்திய அணுசக்தித் துறையும், ஹைதராபாத்தின் ஜவகர்லால் தொழில் நுட்பப் பல்கலைக் கழகமும், அறிவியல் இதழ்களில் வெளியிட்ட கட்டுரைகளில் கொடைக்கானலின் பேரிஜம் ஏரியும், கொடைக்கானல் ஏரியும் பாதரசத்தால் மாசுபட்டுள்ளன என்று எழுதியிருக்கின்றன. இந்த மாசுபாட்டின் காரணம் முழுக்க முழுக்க தெர்மா மீட்டர் ஆலைதான் என்று ஆய்வில் தெரியவருகிறது.
இந்துÞதான் யூனி லீவர் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது. பாதரச கழிவுகளை அப்புறப்படுத்துவதாக அது ஒப்புக்கொண்டது; ஆனால், அதன்படி செயல்படவில்லை. 2015 ஜூலை 30 ஆம் தேதி, “கொடைக்கானல் வோண்ட்” எனும் இரண்டு நிமிட ராஃப் இசைப் பாடல் ‘யூ டியுப்-இல் வெளியானது. இப்பாடல் கடந்த இரு வாரங்களில் 30 இலட்சத்துக்கும் அதிகமாகப் பகிரப்பட்டுள்ளது.
சென்னை பெண் சோஃபியா அஷ்ரஃப் பாடியுள்ள இப்பாடல் வலியுறுத்தும் செய்தி “கொடைக்கானலைக் காப்போம்” என்பதே.
கொடைக்கானல் மலைகளையும், ஏரிகளையும், அங்கு வாழும் மக்களையும் பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
யூனி லீவர் நிறுவனம் 1 கிலோ கிராம் மண்ணுக்கு 1 மில்லி கிராம் முதல் 10 மில்லி கிராம் மிகாமல் பாதரசக் கழிவுகளை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் கொட்டிவிடாமல் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லும் வகையில் மத்திய அரசை உரிய வகையில் தொடர்பு கொண்டு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறேன் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment