Wednesday 28 October 2015

ம.தி.மு.க பொதுச்செயலாளருக்கு வெற்றி மேல் வெற்றி - வைகோவின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்பு வேலிக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை 100 நாள்கள் வேலைத்திட்டத்தில் சேர்க்க பரிந்துரை!







தமிழ்நாட்டில் குறிப்பாக 13 தென் மாவட்டங்களில் வேலிக் கருவேல மரங்கள் படர்ந்து, சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் பெரும் நாசத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. நிலத்தடி நீரை அடியோடு உறிஞ்சி, கரிக்காற்றை வெளியிடும் இம்மரங்களால் சுற்றுச்சூழல் நஞ்சாகிறது. பறவைகள், விலங்குகள் அண்ட முடியாது. எனவே, இவற்றை அகற்றுவதற்கு அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆகஸ்ட் மாதம் வைகோ பொது நல வழக்குத் தொடுத்தார்.
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு உரிய யோசனைகளை வைகோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுதாகர், வேலுமணி அம்மையார் ஆகியோர் கடந்த அமர்வின்போது கேட்டுக் கொண்டனர். அத்தகைய பரிந்துரை யோசனைகளைக் கொண்ட விண்ணப்பத்தை வைகோ இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
வேலிக் கருவேல மரங்களை விறகாகப் பயன்படுத்தி அதில் கிடைக்கின்ற வருமானத்தைக் கொண்டு கிராம மக்கள் வாழ்கிறார்கள் என்று அரசாங்கத்தின் முதன்மைச் செயலாளர் இன்று தாக்கல் செய்துள்ள அறிக்கை உண்மைக்குப் புறம்பானது. கிராமப்புற வேலைத்திட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, கிராம மக்கள் வேலிக் கருவேல மரங்களை வெட்டுவது இல்லை. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புச் சட்டத்தின் உட்பிரிவு 4 இன் படி நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கும், நீர் வளத்தைப் பெருக்குவதற்கும் 100 நாள்கள் வேலைத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கு இடம் அளிக்கிறது. அந்த அடிப்படையில், வேலிக் கருவேல மரங்களை அகற்றுகின்ற திட்டத்தை 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் எடுத்துக் கொண்டு தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
இந்தப் பொது நல வழக்கு விசாரணை இந்த நீதிமன்றத்தில் நன்மை ஏற்பட்டு உள்ளது. கிராமப்புறங்களிலும், பொது இடங்களிலும் சீமைக் கருவேல மரங்களின் ஆபத்து குறித்து மக்கள் விவாதிக்கின்றார்கள். 13 மாவட்டங்களின் ஆட்சியர்களும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். அரசாங்கம் இதில் கவனம் செலுத்தி இருப்பதை வரவேற்கிறேன்.
கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுகிறபோது, அதற்கு மாற்றாக அந்த இடங்களில் வேறு எந்த மரங்களைப் பயிரிடலாம் என்பதை, பொதுப்பணி மற்றும் வேளாண் துறையினர் ஆய்வு செய்து செயல்படுத்த வேண்டும். வேலிக்கருவேல மரங்களின் தீமை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடகங்கள் மூலம் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
என்று கேட்டுக் கொண்டார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பு ஆணையில் வைகோவின் பரிந்துரைகளைச் சுட்டிக்காட்டினர். இந்தப் பணியை 100 நாள்கள் வேலைத்திட்டத்தின் கீழ் செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்ததுடன், பொதுநல வழக்குத் தொடுத்த வைகோவின் முயற்சிக்குப் பாராட்டும் தெரிவித்தனர். அரசாங்கம் எடுக்கின்ற மேல் நடவடிக்கைகள் குறித்து 2016 ஜனவரி 4 ஆம் வாரத்தில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment