Sunday, 25 October 2015

கச்சத்தீவை தாரை வார்க்க அனுமதித்தது தி.மு.க.தான்: ஓ.பன்னீர்செல்வம் பகிரங்க பேச்சு


கச்சத்தீவை தாரை வார்க்க அனுமதித்தது தி.மு.க.தான் என்றும் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் கச்சதீவு விரைவில் மீட்கப்படும் என்றும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

விருதுநகர் அம்மன் கோவில் திடலில் விருதுநகர் நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.வின் 44-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளரும், நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தந்தை பெரியார் சீர்திருத்த கருத்துக்களை திறம்பட செயலாக்க உழைத்தார். பேரறிஞர் அண்ணா தமிழர்களை தலை நிமிரச் செய்ய பாடுபட்டார். எம்.ஜி.ஆர். ஏழை, எளிய மக்களின் நலனுக்காக உழைத்தார். இந்த 3 தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று மக்கள் நலனுக்காகவே பாடுபட்டு வருபவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். 17 லட்சம் உறுப்பினர்களுடன் இந்த கட்சியை விட்டு மறைந்த போது கண்ணிமை போல் கட்சியை கட்டிக்காத்து அ.தி.மு.க. இனி இருக்காது என்று ஆருடம் சொன்னவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இன்று ஒன்றறை கோடி உறுப்பினர்களுடன் அ.தி.மு.க.வை ஆலமரமாக விழுது பரப்பி நிலை நிறுத்தி உள்ளவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர். 10 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா 14 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் தொலைநோக்கு திட்டத்தோடு மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட 96ஆயிரம் கோடி வருமானத்தை மீண்டும் மக்கள் நலனுக்காக செலவிடுபவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. மொத்த வருமானத்தில் 48 சதவீதத்தை சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஒரு மனிதனுக்கு முக்கிய தேவையாகும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1 கோடியே 80 லட்சம் குடும்பத்தினருக்கு ரேஷன் கடை மூலம் மாதம் 20 கிலோ ரேஷன் அரிசியினை வழங்கி வருகிறார். ஆண்டுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பசுமை வீடுகள் மற்றும் இலவச வீடுகள் கட்டி தருகிறார். கல்விக்கென 23 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையாகும்.

விஜயகாந்த் அமைச்சர் அந்தஸ்துள்ள எதிர்கட்சி தலைவராக முறையாக செயல்படுவதில்லை. அதனால் தான் மாபா பாண்டியராஜன் அங்கிருந்து வந்து நம்முடன் இணைந்து விட்டார். வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அவர் வெற்றி பெற முடியாது. பாரம்பரியமிக்க

காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக உள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நடிகை நக்மா சினிமாவிலும் நேரிலும் அழகாக உள்ளார் என்ற கருத்தினை கண்டுபிடிப்பை சொல்லி வருகிறார். ஸ்டாலின் நடக்கிறார், ஓடுகிறார். பா.ம.க. தலைவர் நானும் என் குடும்பத்தாரும் பதவிக்கு வந்தால் நடுத்தெருவில் நிறுத்தி சாட்டையால் அடியுங்கள் என்று கூறினார். அவரது மகன் மத்திய மந்திரியாக இருந்த கதையும் முடிந்து போய் விட்டது. தற்போது முதல்-அமைச்சர் கனவில் அலைகிறார். இவர்கள் எல்லாம் மக்களின் ஆதரவை பெற்று தேர்தலில் வெற்றி பெற முடியாது.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக வந்த பின்பு தான் உச்சநீதிமன்றம் மூலம் போராடி காவிரி நதிநீர் ஆணையத்தை பெற்று தந்தார். இதே போன்று முல்லைபெரியாறு பிரச்சனையிலும் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு தான் உச்சநீதிமன்ற ஆணை மூலம் 142 அடி தண்ணீரை தேக்கி வைக்க உத்தரவு பெற்றார். கேரள அரசின் சட்டதிறுத்தம் செல்லாது என்ற தீர்ப்பினையும் பெற்றார். ஈழத்தமிழர் பிரச்சினையில் காங்கிரசோடு தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அங்கு போரை நிறுத்தியிருக்கலாம். ஆனால் தி.மு.க. எதையும் செய்யவில்லை. கச்சத்தீவை தாரை வார்க்க அனுமதித்தது தி.மு.க. தான். தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா அது ராமநாதசேதுபதியின் நிலம் தான் என்பதற்கான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்துள்ளார். ஈழத்தமிழர் நலனுக்காக சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளார். சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். மதுவிலக்கை பற்றி பேசும் தி.மு.க. தான் ராஜாஜியின் எதிர்ப்பையும் மீறி மது விற்பனையை அறிமுகப்படுத்தியது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கணக்கில் கெட்டிக்காரார். எப்போதும் நூற்றுக்கு நூறு பெறுபவர். உள்ளாட்சி தேர்தலில் 98 சதவீத இடங்களில் வெற்றி பெற்றோம். கூட்டுறவு தேர்தலில் 100 சதவீத இடங்களில் வெற்றி பெற்றோம். பாராளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் வெற்றி பெற்றோம். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு என்பதற்கு அ.தி.மு.க. அரசின் சாதனைகளே அத்தாட்சியாக விளங்குவதால் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவது உறுதி. அதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, மிட்டா மிராசுதாரரை நம்பி எம்ஜிஆர் இந்த இயக்கத்தை துவங்கவில்லை. 

சாதாரண சாமாணிய, ஏழைகளை நம்பி எம்ஜிஆர் இந்த இயக்கத்தை துவங்கினார். சாமானிய கூலித்தொழிலாளிகளை நம்பி துவங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று நாட்டின் 3வது மிகப்பெரிய கட்சியாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த இயக்கத்தை எம்ஜிஆர் 30 லட்சம் உறுப்பினர்களோடு விட்டு சென்றார். இந்த இயக்கத்தில் தற்போது ஒன்றறை கோடி தொண்டர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். திமுக அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. தமிழக முதல்வர் அம்மாவை விமர்சிக்க கருணாநிதிக்கு அருகதை கிடையாது. ஸ்டாலின் முதல்வர் பதவிக்காக குப்பாடு போடவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்று ஸ்டாலினுக்கு தெரியும். கட்சியை காப்பாற்றவே நமக்குநாமே சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். எம்எல்ஏ தேர்தலில் உலக வரலாற்றில் ஒன்றறை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஒரே தலைவி ஜெயலலிதா மட்டும்தான். விருதுநகர் மாவட்டத்தில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் 7 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடி இம்மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை என்பதை நிருபிப்போம் என்றார்.

No comments:

Post a Comment