தீபாவளி திருநாளை கொண்டாட வசதியாக சிமெண்ட் ஆலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் அரியலூர் சிமெண்ட் ஆலை, ஆலங்குளம் சிமெண்ட் ஆலை, ஆலங்குளம் கல்நார் தகடு ஆலை, விருத்தாசலம் கற்குழாய் ஆலை ஆகிய 4 ஆலைகள் செயல்படுகின்றன. இவற்றில் 480 நிரந்தரப் தொழிலாளர்களும், 590 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் நிரந்தர ஊழியர்களுக்கும், நாடு முழுவதும் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை தொழிலாளர்களுக்கும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. சிமெண்ட் ஆலை தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகங்களுக்கு இடையே 2011 ஆம் ஆண்டு கையெழுத்தான ஊதிய ஒப்பந்தம் 31.03.2014 அன்று முடிவுக்கு வந்த நிலையில், 01.04.2014 முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால், உடன்பாடு எட்டப்படுவதில் தாமதமானதால் இரு தரப்புக்கும் இடையிலான புதிய ஊதிய ஒப்பந்தம் 29.07.2015 அன்று தான் மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.3000 வீதமும், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.3000 வீதமும் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர வேண்டிய நாள் முதல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாள் வரையிலான 16 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை இரு கட்டங்களாக வழங்க வேண்டும்; 30.09.2015-க்குள் முதல் 8 மாத நிலுவைத் தொகையையும், 29.02.2016&க்குள் அடுத்த 8 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, இப்பிரிவு ஊதிய ஒப்பந்தத்திலும் சேர்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி நாடு முழுவதும் அனைத்து தனியார் சிமெண்ட் ஆலைகளிலும் ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது மட்டுமின்றி நிலுவைத் தொகையும் முறையாக வழங்கப்பட்டு விட்டது. ஆனால், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு கடைசி 4 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகை மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி மீதமுள்ள ஓராண்டுக்கான ஊதிய உயர்வு நிலுவையை வழங்க அரசு மறுக்கிறது. ஒவ்வொரு ஊழியருக்கும் சராசரியாக ரூ.40 ஆயிரம் என்று வைத்துக் கொண்டாலும்
அனைத்து ஊழியர்களுக்குமான நிலுவைத் தொகை ரூ. 2 கோடிக்கும் குறைவாகவே இருக்கும். ஆண்டுக்கு ரூ.250 கோடி வருவாய் ஈட்டக்கூடிய நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க அரசு மறுப்பதில் இருந்தே அதன் தொழிலாளர் விரோதப் போக்கை புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கு தொழிலாளர்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது.
தமிழ்நாட்டில் அரசு சிமெண்ட் தேவை அதிகரித்த நிலையில், உற்பத்தியை கூட்டியிருந்தால் அந்நிறுவனம் அதிக லாபம் ஈட்டியிருக்க முடியும். ஆனால், அரியலூர் சிமெண்ட் ஆலையின் உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 5 லட்சம் டன்னிலிருந்து 15 லட்சம் டன்னாக உயத்துவதற்காக ரூ.542.52 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இதுவரை அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அதேபோல், ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை ரூ.165 கோடியில் நவீனப்படுத்தும் திட்டமும் கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இத்திட்டங்கள் மட்டும் செயல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் லாபத்தில் செழித்திருக்கும். ஆனால், ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு நலிவடையச் செய்தது அரசு தானே தவிர, ஊழியர்கள் அல்ல.
எனவே, பொய்யான காரணங்களைக் கூறி சிமெண்ட் ஆலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க மறுப்பது சரியல்ல. அனைத்துத் தொழிலாளர்களும் தீபஒளி திருநாளை கொண்டாட வசதியாக அவர்களுக்கான ஊதிய உயர்வு நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment