Tuesday 20 October 2015

புதுவையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: நடிகை நக்மா நாசுக்கான பேச்சு


அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தமிழகம், பீகார் மற்றும் புதுவை மாநிலங்களின் மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளை நக்மா சந்தித்து வருகிறார். புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு நக்மா இன்று மதியம் வந்தார். அவரை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் நாராயணசாமி, பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம், துணைத்தலைவர் விநாயகமூர்த்தி, மகிளா காங்கிரஸ் தலைவி பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் நக்மா நிருபர்களிடம் கூறியதாவது:–
அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக என்னை நியமித்து தமிழகம், பீகார், புதுவை மாநில பொறுப்பையும் அளித்த காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்காக முழு மூச்சோடு பாடுபடுவேன்.
புதுவையில் சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்து என்.ஆர். காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கவில்லை. புதுவையில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது. வழிப்பறி, கொள்ளை, கொலை, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. புதுவையில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா ஆட்சியால் வளர்ச்சி இல்லை. இந்து, முஸ்லிம்களிடையே பாரதிய ஜனதா பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்துபோயுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று புதுவையில் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment