Tuesday 27 October 2015

மீண்டும் அட்டூழியம் - இலங்கை கடற்படையினரால் 34 தமிழக மீனவர்கள் கைது



இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பெரும் தொகையை அபராதமாக விதிப்பது பற்றி அந்த நாட்டு முடிவு எடுத்து உள்ளநிலையில் 34 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

கடலில் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கியால் சுடுவதோடு அவர்களுடைய வலைகளையும் சேதப்படுத்துகிறார்கள். சில சமயங்களில் மீனவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும், இந்த பிரச்சினை தொடர்கதையாக நீடிக்கிறது. மீனவர்களின் பிரச்சினையை மனிதாபிமானத்தோடு கையாளவேண்டும் என்று இலங்கையை இந்தியா கேட்டுக்கொண்டு உள்ளது.

இந்த நிலையில், தங்கள் கடல் எல்லைக்குள் வரும் இந்திய மீனவர்களுக்கு பெரும் தொகையை அபராதமாக விதிப்பது பற்றி இலங்கை அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த இலங்கை மீன்வளத்துறை டைரக்டர் ஜெனரல் எம்.சி.எல்.பெர்னாண்டோ, இலங்கை கடல் எல்லைக்குள் இனி அத்துமீறி நுழைந்து, மீன்பிடிப்பவர்களுக்கு அதிகபட்சமாக பதினைந்து கோடி ரூபாய்வரை அபராதம் விதிக்க அந்நாட்டு மீன்வளத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை அரசு எடுத்துள்ள இந்த அடாவடி முடிவு அனைத்து தரப்பினரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த அறிவிப்புக்கு தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 34 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றது. மீனவர்கள் வலையையும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. மீனவர்களுக்கு சொந்தமான 7 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 23 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்குவந்த இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

இதேபோல் ராமேசுவரத்தை சேர்ந்த 11 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்டையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் தலைமன்னார், காங்கேசன்துரை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment