தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் கூறியதாவது:–
பருப்பு விலை கிலோவுக்கு ரூ.52–ல் இருந்து ரூ.200–ஐயும் தாண்டிவிட்டது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிடம் இருந்து 500 டன் பருப்பு இறக்குமதி செய்துள்ளோம். இனி பருப்பு விலை குறையும் என்கிறார்.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள பருப்பு 1 லட்சம் பேருக்கு கூட போதாது. தமிழ்நாட்டில் 1 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இது மக்களை ஏமாற்றும் நாடகம். உண்மையான பதுக்கல்காரர்களை இன்னும் பிடிக்கவில்லை. பருப்பு பதுக்கலுக்கு பா.ஜனதா வியாபாரிகளே காரணமாக இருக்கிறார்கள்.
குடிநீர் பிரச்சினை, மின் பற்றாக்குறை இப்படி எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் உள்ளன. இதை கவனிக்காமல் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுக்கிறார். இது எந்த வகையில் நியாயம். உடனடியாக ஜெயலலிதா சென்னை திரும்பி மக்கள் பிரச்சினைகளை கவனிக்க வேண்டும்.
இதேபோல் காங்கிரஸ் ஒருமுறை ஊட்டியில் சட்டசபை கூட்டத்தை நடத்திய போது எதிர்க்கட்சிகள் கேலி பேசின. ஆனால் இப்போது ஜெயலலிதா அமைச்சர்கள் கூட்டத்தையும் அதிகாரிகள் கூட்டத்தையும் கொடநாட்டில் நடத்துகிறார். உடனடியாக அவர் மலையில் இருந்து இறங்கி கீழே வரவேண்டும்.
இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்தபோது நியமித்த குழுவே அங்கு போர்க்குற்றங்கள் நடந்திருப்பதை தெளிவுபடுத்தி உள்ளன. அப்பாவி தமிழர்களுக்கு கேடு விளைவித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டே தீரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment