திருச்சி ஆக்ஸ்போர்டு கல்லூரியில் மேக் இன் இந்தியா திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. அதனை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
பா.ஜனதா பதவியேற்றதும் தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, யோகா திட்டம் என 5 முத்தான திட்டங்கள் தொடங்கப்பட்டது. இந்த திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது. எதிர்கட்சிகள் ஆதாரம் இல்லாமல் மத்திய அரசு மீது புகார் கூறி வருகிறார்கள்.
தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு 60லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். தமிழக கட்சி தலைவர்கள் பொதுமக்களை சந்தித்து வருகின்றனர். மக்களை சந்திப்பதுதான் அரசியல்வாதிகளின் கடமை. ஆனால் இதனை பெரிதுபடுத்துகிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை. காவிரியாறு உள்பட பல்வேறு நீர் நிலைகளில் தடுப்பணை கட்டப்படவில்லை. இதனால் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.
தமிழகத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா எந்தெந்த கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டதோ அந்த கட்சிகளுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க விரும்புகிறது. ஆனால் பா.ம.க. முதல்வர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்துள்ளது. அதனை நாங்கள் ஏற்க முடியாது. கச்சத்தீவை சட்டப்படி மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மின் தட்டுப்பாடு உள்ளது. எல்.இ.டி. விளக்குகளை பயன்படுத்தினால் மின்சாரத்தை சேமிக்க முடியும். ஆனால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment