Saturday 24 October 2015

பல லட்சணக்கான தமிழர் வாழ்வாதாரத்தை பாழ்படுத்த கால்பதித்துள்ள சீனா பட்டாசுகளை ஒருபோதும் அனுமதிக்க கூடாது! சீனா பட்டாசுகளை எந்த வழியிலும் இந்தியாவுக்குள் அனுமதிக்காமல் தீவிர கண்காணிப்பு தேவை! தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் வலியுறுத்தல்


தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளதாவது.,  தமிழகத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக திகழும் பட்டாசு தொழிலை பாழ்படுத்திட கால்பதித்துள்ளது சீனா பட்டாசு. மேலும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் 850க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் 1 லட்சம் பேர் நேரடியாகவும், 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசுகள் இந்திய அளவில் 90 விழுக்காடு வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொழிலில் ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடிக்கு அதிகமாக வியாபாரம் நடக்கிறது. கலால் மற்றும் விற்பனை வரியாக மத்திய, மாநில அரசுகளுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது

கடந்த ஆண்டு சீன பட்டாசு வருகை காரணமாக சிவகாசி பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ2,000 கோடி அளவுக்கு ஆர்டர்கள் குறைந்து போயுள்ளன. இதனால் அரசுக்கும் ரூ530 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் வாரத்துக்கு 3 நாட்கள்தான் வேலை என்பது நடைபெறுகிறது. இந்த மோசமான நிலைமைக்கு காரணமே சீனா பட்டாசுகளின் வரத்துதான்.

சீனா பட்டாசுகள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் வெவ்வேறு பெயர்களில் சீனாவில் இருந்து பட்டாசுகளை கொள்முதல் செய்வதில் சமூகவிரோத கும்பல் மும்முரம் காட்டவே செய்யும்.


ஆகையால் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் இந்த சீனா பட்டாசுகளை துறைமுகங்கள், விமான நிலையங்கள் வழியாக கொண்டுவரப்படுவதை மிகத் தீவிரமாக கண்காணித்து தடுத்தாக வேண்டும். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் சீனா பட்டாசுகள் பதுக்கப்பட்டுள்ள இடங்களை கண்டறிந்து அழித்து அவற்றை பதுக்கியோர் மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment