திட்டமிட்டு வேண்டுமென்றே என் பெயரை நீக்கி இருக்கிறார்கள். இதனால் ஓட்டு போட முடியவில்லை என்று நடிகை சச்சு கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பல முன்னணி நடிகர்களும் காலை முதலே தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
வாக்குப் பதிவு செய்ய வந்த நடிகை சச்சு செய்தியாளர்களிடம் பேசியதாவது:
''1953-ல் நடிகர் சங்கம் உருவானது. முதல் 10 உறுப்பினர்களில் எனது அக்கா மாடி லட்சுமியும் ஒருவர். நான் 50 வருடங்களுக்கு மேலாக உறுப்பினராக இருக்கிறேன். 2007-ல் இப்போது நிர்வாகியாக இருப்பவர்களிடம் உறுப்பினர் உரிமத்துக்காக ரூ.5000 பணம் கொடுத்தேன். 2017 வரைக்கும் அதற்கான உறுப்பினர் உரிமம் இருக்கிறது. ஆனால், நீங்கள் பணம் கட்டவில்லை. ஓட்டு போட முடியாது என்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே உறுப்பினராக இருக்கிறேன். நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆக இல்லை என்றால் நான் நடிகை என்று சொல்லிவிட முடியாது. திட்டமிட்டு வேண்டுமென்றே என் பெயரை நீக்கி இருக்கிறார்கள். தற்போது உள்ள நிர்வாகிகள், உறுப்பினர்கள் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்'' என்று சச்சு பேசினார்.