ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம், சோன்பேட் என்ற கிராமத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த ஜிதேந்தர் என்பவர் வீட்டுக்கு சாதி ஆதிக்க வெறியர்கள் தீ வைத்துள்ளனர். இதில் அவரது இரண்டு வயது ஆண் குழந்தை மற்றும் பத்து மாத பெண் குழந்தை தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இக்குழந்தைகளின் தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரியானா மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான கொடூர தாக்குதல்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. 2012 இல் 252 சம்பவங்களும், 2013 இல் 493, 2014 இல் 830 என்று தாக்குதல்கள் தொடர்கின்றன. தலித் மக்கள் குடியிருப்புகளுக்கு தீ வைப்பதும், அம்மக்கள் உயிரோடு கொளுத்தி கொல்லப்படுவதும் அரியானாவில் சர்வ சாதாரணமாக நடக்கிறது.
தலித் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களுக்கு அரியானா மாநில பாஜக அரசு முற்றுப்புள்ளி வைக்காமல், சாதிய வேறுபாடுகளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறது.
தலித் குடும்பத்தைச் சேர்ந்த இரு பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்காமல் மத்திய வெளியுறவு இணையமைச்சர் வி.கே.சிங், “சில இடங்களில் நாய் மீது சிலர் கல்லெறிவார்கள். இதற்கெல்லாம் அரசாங்கத்தைக் குறை கூற முடியுமா” என்று ஆணவத்தோடு கூறியிருக்கிறார். மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் அதிகாரத் திமிர் கொண்ட இரக்கமற்ற இந்தக் கருத்துக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிகார மமதையில் மனிதாபிமானத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு விமர்சனம் செய்துள்ள மத்திய அமைச்சர் வி.கே.சிங் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். தலித் குழந்தைகள் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment