Wednesday 21 October 2015

'இலங்கையில் நடைபெற்ற இறுதிபோரில் போர்க்குற்றங்கள் நடந்தது உண்மையே' சேனல் 4 வெளியிட்ட காட்சிகள் உண்மைதான்




கொழும்பு: 'இலங்கையில், 2009ல் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, ராணுவம், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை தான். இதுகுறித்த, உள்நாட்டு விசாரணையில், வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென்ற பரிந்துரை ஏற்கத்தக்கதே' என, அந்நாட்டு அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு கூறியுள்ளது.

இலங்கையில், 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர், 2009ல், முடிவுக்கு வந்தது. இப்போரின் இறுதி நாட்களில், எண்ணற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களில், ராணுவத்தினர் ஈடுபட்டதாக, ஐ.நா., மனித உரிமை கமிஷன் குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக, வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட குழு, விசாரணை நடத்த வேண்டுமென, ஐ.நா., பரிந்துரைத்தது. ஆனால், போர்க்குற்றங்கள் குறித்து, இலங்கை உள்நாட்டு குழு விசாரணைக்கு ஆதரவு தெரிவித்து, கடந்த மாதம், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், ஐ.நா., சபையில் நிறைவேறியது.

இந்நிலையில், முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக் ஷே நியமித்த, ஓய்வுபெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகரமா தலைமையிலான விசாரணைக்குழு, சமர்ப்பித்துள்ள, 178 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில், உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தில், ராணுவம், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் நம்பத்தக்கவை; சரியான முறையில் விசாரணை நடத்தப்பட்டால், ராணுவ வீரர்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டது நிரூபணம் ஆகலாம். இக்குற்றங்களை விசாரிக்க, இலங்கை சட்ட முறைக்கு உட்பட்ட, போர் குற்ற பிரிவை அமைக்க வேண்டும்.கடைசி கட்டத்தில் பிடிபட்ட தமிழ் போர்க்கைதிகளை, ராணுவ வீரர்கள் கொலை செய்ததை காட்டும், 'சேனல் 4'ன் வீடியோ காட்சிகள் உண்மையானவை தான். சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினரையும், தலைவர்களையும், படுகொலை செய்த சம்பவங்கள் குறித்து, தனி நீதிபதி விசாரிக்க வேண்டும். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். போர்க்குற்ற புகார்கள் குறித்த விசாரணையில், சர்வதேச நாடுகளின் நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென்ற, ஐ.நா., பரிந்துரை ஏற்கத் தக்கது.இவ்வாறு, மேக்ஸ்வெல் பரனகரமா சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, நேற்று, இலங்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment