Wednesday, 21 October 2015

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை



பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபஒளி திருநாளை சிறப்பாக கொண்டாட வசதியாக ஒரு மாதத்திற்கு முன்பாக ரூ.5000 முன்பணம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தீபஒளி திருநாளுக்கு இன்னும் 3 வாரங்களுக்கும் குறைவாகவே இருக்கும் நிலையில், இதுவரை முன்பணம் வழங்கப்படவில்லை.
அதேபோல், தீபஒளி திருநாளையொட்டி போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும். நடப்பாண்டில் எத்தனை விழுக்காடு போனஸ் என்பது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்துடன் தொழிற்சங்கங்கள் பேச்சு நடத்த வேண்டும்.
இதற்கான கால அவகாசத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தால் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பாக போனஸ் குறித்த பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான அறிகுறிகள் கூட இதுவரை தென்படாததால் ஊழியர்களிடையே மனக்குறை நிலவுகிறது.
போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் சமுதாயத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் ஆவர். முன் பணம் மற்றும் போனஸ் முன் கூட்டியே வழங்கினால் தான் தீபஒளியைக் கொண்டாட அவர்கள் தயாராக முடியும்.
எனவே போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான முன்பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். அத்துடன் ஜூலை மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய 6 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவித்து, அதையும், அதற்கான நிலுவைத் தொகையையும் அக்டோபர் மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்களுக்கும் நடப்பாண்டு தீபஒளிக்கு 25 சதவீதம் போனசை ஊதிய உச்ச வரம்பின்றி தற்காலிக ஊழியர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் இவ்வாரத்திற்குள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment