Tuesday 27 October 2015

ஆம்னி பஸ் கட்டண உயர்வை குறைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்: இளங்கோவன்


ஆம்னி பஸ் கட்டண உயர்வை குறைப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக ஆம்னி பஸ்களில் பண்டிகை நாட்கள் இல்லாத காலங்களில் வழக்கமான கட்டணததை வசூலிப்பதும், அதுவே பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் மூன்று மடங்கு வரை கட்டணம் உயர்த்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது. 

தமிழகத்தில் 2000-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஆயுதபூஜை விடுமுறையின் போது சென்னையிலிருந்து மதுரை செல்ல ரூ.2,000 வரை வசூலிக்கப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். அதேபோல தற்போது தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் 40 சதவீதம் கட்டண உயர்வை தன்னிச்சையாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் உயர்த்தி வருகிறார்கள். சென்னையிலிருந்து திருநெல்வேலி பயணம் செய்ய ரூ.1450 வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசோ, போக்குவரத்து நிர்வாகமோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முன்வராதது பல்வேறு சந்தேகங்களை வளர்க்கிறது. 

பொதுவாக ஆம்னி பஸ்கள் சுற்றுலா பர்மிட் பெற்று அதனடிப்படையில் அரசு பேருந்துகள் எப்படி இயங்குகிறதோ, அப்படி இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இதற்காக தனி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் இத்தகைய சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு தன்னிச்சையாக திடீர் திடீரென பேருந்து கட்டணத்தை உயர்த்துவதை தடுக்க தமிழக அரசால் ஏன் முடியவில்லை? இதற்குப் பின்னாலே மிகப்பெரிய உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. 

அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஆப்பரேட்டர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் பெரும் தொகை அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு பெரும் தொகை நன்கொடையாக அடிக்கடி வழங்கப்பட்டு வருவதால் ஆம்னி பஸ் கட்டண உயர்வை தடுப்பது குறித்து எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்குப் பின்னாலே மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

திட்டமிட்டு பயணம் செய்பவர்கள், ரயில் மூலமாகவோ, அரசு பேருந்து மூலமாகவோ முன்பதிவு செய்து ஓரளவு குறைந்த கட்டணத்தை பயணம் செய்ய முடிகிறது. ஆனால் பெரும்பாலான பயணிகள் திடீரென திட்டமிடாமல் பயணம் செய்கிற நிலை ஏற்படுகிற போது ஆம்னி பேருந்துகளில்தான் பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அடிக்கடி கட்டணத்தை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். இக்கட்டண உயர்வை உடனடியாக குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment