Sunday 25 October 2015

தமிழக மீனவர்கள் 86 பேர் வரும் 28ம் தேதி விடுதலை செய்யப்படுவார்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு


இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 86 பேர் வரும் 28ம் தேதி விடுதலை செய்யப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாக் வளைகுடா பகுதியினைச் சேர்ந்த மீனவர்கள், தங்களது பாரம்பரிய மீன் பிடிப்பு பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடும்போது இலங்கை ராணுவத்தினரால் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது, அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டு வருகிறார். கடந்த 2011ஆம் ஆண்டு மே திங்கள் முதல், நாளது தேதி வரையில் 73 கடிதங்கள் வாயிலாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது மற்றும் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்திடவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பயனாக, இலங்கை சிறைகளில் வாடும் 86 மீனவர்கள், 28.10.2015 அன்று இலங்கை அரசால் விடுவிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழக சிறையில் உள்ள இரண்டு இலங்கை மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் 28.10.2015 அன்று விடுவிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment