Tuesday, 27 October 2015

தமிழக மீனவர்கள் 34 பேர் கைது: நிரந்தர தீர்வு காண்பதில் இனியும் தாமதம் கூடாது! பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிவுறுத்தல்






பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசு அச்சுறுத்தியதால் ஏற்பட்ட பதற்றம் விலகுவதற்கு முன்பாக வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மற்றும் நாகை மீனவர்கள் 34 பேரை சிங்களப்படை இன்று அதிகாலை கைது செய்திருக்கிறது. அவர்களுக்கு சொந்தமான 7 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களை சிங்களப் படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் 11 மீனவர்களை அவர்களுக்கு சொந்தமான 3 படகுகளுடன் சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அதேபோல், கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்திய சிங்களப் படையினர், 23 மீனவர்களை 4 படகுகளுடன் கைது செய்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த இரு தாக்குதல்களில் மீனவர்களின் விசைப் படகுகளும், மீன் பிடி கருவிகளும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தாக்குதல் காரணமாக மற்ற தமிழக மீனவர்களும் தொடர்ந்து மீன் பிடிக்க முடியாமல் பாதியிலேயே கரை திரும்பியுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த தாக்குதலும், கைது நடவடிக்கையும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
இராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 86 மீனவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் 39 படகுகளும் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாளை விடுவிக்கப்படுவர் என்று மத்திய, மாநில அரசுகள் வாக்குறுதி அளித்ததை ஏற்று தான் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். அதன் பின் முதல்முறையாக மீன் பிடிக்கச் சென்றபோதே தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதிலிருந்தே மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை எவ்வளவு கொடிய அணுகுமுறையை கடைபிடிக்கிறது என்பதை உணரலாம்.
ஒருபுறம், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தால் ரூ.15 கோடி வரை அபராதம் விதிப்போம் என்று இலங்கை அரசு செயலாளர் எச்சரிக்கிறார். அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்த பிறகு, அப்படி எந்த திட்டமும் இல்லை என்று இலங்கை அரசு மறுக்கிறது. விடுதலை செய்வதாக வாக்குறுதி அளிக்க மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாகவே மேலும் 34 மீனவர்களை சிங்கள அரசு கைது செய்கிறது. இவற்றில் எந்த நடவடிக்கையுமே இருதரப்பு உறவை வலுப்படுத்துவதாக இல்லை. இவை அனைத்துமே இந்தியாவைச் சீண்டிப் பார்க்கும் செயல்களாகவே தோன்றுகின்றன. இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையிலான இச்செயல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது. மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் நேரம் வந்து விட்டது.
ஆனால், தமிழக அரசின் நடவடிக்கைகள் அதற்கு உகந்ததாக இல்லை. தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் தமிழக கட்சிகள் பிளவுபட்டிருக்கின்றன என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தான் அதன் நடவடிக்கைகள் உள்ளன. மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக வரும் 31 ஆம் தேதி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் தனியாக அனுப்பி அவரை சந்திக்க வைத்திருப்பது தமிழகத்தின் மீதான மதிப்பை குறைத்துவிடும். தமிழகநலன் சார்ந்த காவிரி பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை போன்றவற்றை தீர்ப்பதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்று பட்டு ஒரே குரலில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பி, காவிரி பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதில் எடுக்கப்படும் முடிவை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் தில்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் மீனவர்கள் பிரச்சினையை இந்திய இறையாண்மை சார்ந்த விஷயமாக கருதி, நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment