Thursday 22 October 2015

மத்திய அரசின் நடவடிக்கைகளை மாநில அரசு சரியாக பின்பற்றாததால் தான் தமிழகத்தில் பருப்பு விலை அதிகம்: தமிழிசை


 
சென்னையில் ச.ம.க கட்சியின் வக்கீல் அணி இணை செயலாளர் நிரஞ்சன்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

அப்போது தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக அனைத்து பணிகளையும் பாரதிய ஜனதா கட்சி தொடங்கியுள்ளது. 234 தொகுதிக்கும் பா.ஜனதாவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் இன்று முதல் பணிகளை தொடங்கியுள்ளனர். விரைவில் கட்சியின் தொகுதி மாநாடு நடத்தப்படும். இதில் பங்கேற்க முக்கிய தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர். பீகார் தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும் தமிழகத்திற்கு வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்.

பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்தியாவில் தமிழகத்தில் தான் பருப்பு விலை அதிகம் உயர்ந்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளை மாநில அரசு சரியாக பின்பற்றாததால் தான் தமிழகத்தில் பருப்பு விலை மிக அதிகம் உயர்ந்து விட்டது. பருப்பு பதுக்கலை தடுக்குமாறு மத்திய அரசு முன்பே எச்சரித்தது. ஆனால் பதுக்கலை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. ஒரு கிலோ துவரம் பருப்பை ரூ.110-க்கு தருவதாக தமிழக அரசு சொல்வது ஒரு கண் துடைப்பாகும். இந்தியா முழுவதும் மலிவு விலையில் பருப்பு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உணவு பொருள் வாணிப கழகத்தில் இருந்து மத்திய அரசு உணவு பொருட்களை ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கிறது. அந்த பொருட்களை உடனடியாக ரெயிலில் இருந்து இறங்கி கொண்டு செல்லாததால் தமிழக அரசு தினமும் ரூ.1 கோடி (வாடகை) செலுத்தி வருகிறது. கடந்த மாதம் ரூ.30 கோடியை ரெயில்வே துறைக்கு தமிழக அரசு வழங்கி இருக்கிறது. பருப்பு தட்டுப்பாடு ஏற்படும் என மத்திய அரசு கடந்த 22-ந்தேதியே அனைத்து மாநிலத்திற்கும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment