தியாகராயநகரில் சென்னை மாவட்ட பா.ம.க. புதிய அலுவலகத்தை முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது பா.ம.க. இன்று அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக வளர்ச்சி அடைந்து உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் எங்களை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதற்கு காரணம் 50 ஆண்டுகள் நடைபெற்ற திராவிட ஆட்சிகள் மீது மக்களுக்கு உள்ள வெறுப்புதான்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே பா.ம.க. பொதுக் குழுவில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் என்னை கட்சியின் முதல்–அமைச்சர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறேன்.
நாங்கள் யாரையும் நம்பி இந்த தேர்தலில் களம் இறங்கவில்லை. எங்களது பலம், கொள்கை மற்றும் இளைஞர்களை நம்பி இந்த முடிவை எடுத்துள்ளோம். அ.தி.மு.க., தி.மு.க. தவிர வேறு யார் வேண்டுமானாலும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். தற்போதைக்கு அ.தி.மு.க. ஆட்சியின் மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். நிர்வாகம் முறையாக நடைபெறவில்லை. ஊழல் இல்லாத துறையே இல்லை. ஆளும் கட்சி பணத்தை மட்டுமே நம்பி இருக்கிறது.
தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். 2011 தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. 7 தொகுதிகளில் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 50 ஆண்டு கால தி.மு.க. வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் 2ஜி ஊழல் வழக்கு, குடும்ப பிரச்சினை தான். அதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
இப்போது மு.க.ஸ்டாலின் புதுப்புது உடையணிந்து புதுப்புது தோற்றத்துடன் நான் மாறிவிட்டேன். திருந்தி விட்டேன் என்று சொன்னாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். காரணம் 50 ஆண்டு காலம் ஆட்சி செய்து விட்டீர்கள். அப்போது கொண்டு வந்த மாற்றம் என்ன? இப்போது உடையையும், நடையையும் மாற்றினால் போதாது. எண்ணங்களை மாற்ற வேண்டும்.
தி.மு.க. என்றாலே ஊழல் கட்சி என்று மக்களால் முத்திரை குத்தப்பட்டு விட்டது. கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் என்னென்ன திட்டங்களை கொண்டு வருவோம் என்று சொல்லி வருகிறோமோ அதை ஸ்டாலின் அப்படியே காப்பியடித்து வருகிறார். ஸ்டாலினுக்கு சுயசிந்தனை இல்லையா அல்லது தி.மு.க. வுக்கு சுயசிந்தனை இல்லையா என்று தெரியவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குதான் என்றேன். லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வருவோம் என்றேன். ஸ்டாலின் அதை அப்படியே சொல்கிறார். இனி மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்றும் சொல்வார்கள். இந்த வேடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவரது நடிப்பு மக்கள் மத்தியில் எடுபடாது.
தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணிகள் முடிவாகும். ஆனால் இப்போதே 2 கட்சிகள்தான் களத்தில் இருப்பது போல் தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள்.
நடிகர் சங்க தேர்தலுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது. அதில் ஒரு முக்கிய அம்சம் இளைஞர்கள் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்கள். அதே போல் வருகிற தேர்தலிலும் மக்கள் மாற்றத்தை கொண்டு வருவார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்தியில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம். ஆனால் மாநிலத்தில் வேறு முடிவை எடுத்துள்ளோம். மாற்று அணியை உருவாக்கி வருகிறோம். என்மீது மு.க.ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியாது. ஊழல் வழக்கில் 6 மாதமோ அல்லது 1 வருடமோ அவர்களை போல் நான் திகார் ஜெயிலுக்கு செல்லவில்லை.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி, மகள் மீதும் ஊழல் வழக்கு உள்ளது. உலக அளவில் கின்னஸ் படைத்த ஊழல் வழக்கு, சர்க்காரியா கமிஷன் வழக்கு. என் மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு. அரசியல் காரணங்களுக்காக போடப்பட்டது. லஞ்சம் வாங்கியதாகவோ பணம் வாங்கினேன் என்றோ ஊழல் செய்ததாகவோ எதுவும் கிடையாது. முதல் தகவல் அறிக்கையில் கூட என் பெயர் கிடையாது.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஒரு நாளைக்கு முன்பு எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதுபற்றி நான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். மருத்துவ கல்லூரிகளுக்கு அதிகாரிகளின் ஒப்புதலோடு துறை ரீதியாக அனுமதி வழங்கப்பட்டது. இதில் என் மீது எந்த தவறும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு சொல்லி இருக்கிறது.
ஆனால் 2ஜி வழக்கில் மூட்டை மூட்டையாக பணம் பரிமாறப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் வரப்போகிறது. எங்களது வளர்ச்சி தாங்க முடியாமல் தான் பொறாமையால் பேசுகிறார்கள். ஒரே மேடையில் விவாதம் செய்வதற்கு மு.க.ஸ்டாலினை அழைத்து 4 முறை கடிதம் எழுதி விட்டேன். ஆனால் அவர் விவாதத்துக்கு வர தயங்குகிறார். உண்மையிலேயே வளர்ச்சி திட்டத்தை கொண்டு வருவதாக இருந்தால் விவாதத்துக்கு வரலாமே. இப்போது நமக்கு நாமே என்பது தி.மு.க.வில் மு.க.ஸ்டாலினை திணிப்பதற்கு தான்.
விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்களை சந்தித்து அதை செய்வேன். இதை செய்வேன் என்கிறார். இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த போது அதையெல்லாம் ஏன் செய்யவில்லை. குடிசைக்குள் சென்று வருகிறார். தமிழ் நாட்டில் குடிசைகள் இன்னும் மாறாமல் இருப்பதற்கு அவரது தந்தை தானே காரணம். 50 ஆண்டுகளாகியும் குடிசைகளை ஒழிக்க முடியாதது வெட்கக்கேடு.
இந்த நிலையில் மாற்றத்தை கொண்டு வருவோம் என்று சொல்ல மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. மாற்றம், வளர்ச்சி பற்றி பேச அருகதை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவிற்கு ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் ஈகை தயாளன், மு.ஜெயராமன், மாம்பலம் வினோத் நாடார், கன்னியப்பன், நாசே வெங்கடேசன், சீமான், இளங்கோவன், வி.ஆர்.ராஜசேகரன், முத்துக்குமார், ராஜ பாண்டிய வர்மன், சுகுமார், வேளச்சேரி சகாதேவன், பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment